தமிழ் பொதுவேட்பாளர் குறித்து தமிழரசு கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை

6 months ago

தமிழ் பொதுவேட்பாளர் விடயம் குறித்து இலங்கை தமிழ் அரசு கட்சி இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளவில்லை. தெற்கின் பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கையை பார்வையிட்ட பின்னரே அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். சிலர் தமது தனிப்பட்ட கருத்துகளை வெளியிட்டாலும் அது எமது கட்சியின் முடிவல்ல இப்படி தெரிவித்திருக்கிறார் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடு குறித்து 'ஈழநாடு' எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து தெற்கிலுள்ள பிரதான கட்சிகளிடம் நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூறி வருகின்றோம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜே. வி.பியின் தலைவர் அநுரகுமார ஆகியோர் எங்களை சந்தித்து இப்போது பேசியிருக்கிறார்கள்.

அவர்களிடம் நாம் சில விடயங்களை அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறோம்.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் அரசுக் கட்சி இதுவரையும் எந்தவிதமான முடிவையும் எடுக்கவில்லை. இப்போது அதன் தலைவர் என்ற ரீதியில் நான் அதை பொறுப்புடன் கூறுகிறேன்.

எங்களை சந்தித்த தெற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் நாம் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்.

சமஷ்டி கட்டமைப்பு முறையில் ஓர் அரசமைப்பு மாற்றத்தைக் கொண்டு வந்து ஒரு முழுமையான அதிகாரப் பகிர்வை வழங்கும் தீர்வு திட்டத்தை உங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக , தெளிவாக முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.

அந்த அதிகாரப் பகிர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு விளங்கப்படுத்தியிருக்கிறோம்.

அவர்கள் இது குறித்து எங்களுக்கு இதுவரை எந்த உறுதிமொழியையும் வழங்கவில்லை. ஆனால், இந்த விடயத்தில் நாங்கள் விட்டுக்கொடுப் புக்கு இடமில்லை என்பதையும் அவர் களுக்குக் கூறியிருக்கிறோம்.

நாங்கள் குறிப்பிட்ட விடயங்களை உங்களின் அறிக்கைகளில் முதலில் முன் வையுங்கள் என்று கூறியிருக்கிறோம்.

ஆகவே, அவர்களின் அறிக்கைகள் வெளியாகிய பின்னர்தான் தமிழ் அரசு கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் அதுவரை நாம் எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளப் போவதில்லை.

எங்களுடைய மத்திய குழுவிலே முன்னரும் இதுபற்றி பேசியிருக்கிறோம். எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மத்திய குழுக்கூட்டத்தில் இதுபற்றி ஆராயவிருக்கிறோம்.

தேவை ஏற்பட்டால் பொதுச்சபையை கூட்டி ஆராய்வதற்கும் நாம் ஆயத்தமாக இருக்கிறோம். இதுதான் தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடு என்று  தெரிவித்தார்.