வடக்கு - கிழக்கு அதிகாரிகள் அபிவிருத்திக்குப் பின்னடிப்பு!யாழ்ப்பாணத்தில் வைத்து விஜயதாஸ தெரிவிப்பு.
வடக்கு - கிழக்கு அதிகாரிகள் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. வடக்கு - கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் 50 வீதமான நிதி திரும்பி வருகின்றமைக்கு இதுவே காரணம் என்று ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் நீதி அமைச்சருமன விஜயதாஸ ராஜ பக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பெரமுனக் கட்சியினர் என்னை தமது கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட அணுகி இருந்தனர். நான் அதனை மறுத்தேன். தற்போது இளம் அரசியல்வாதியொருவரை வேட்பாளராகக் களம் இறக்கியுள்ளனர். சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதே எனது இலக்கு. எனது பெயரிலும் ராஜபக்ச உள்ளமையால் நான் முந்தைய அரசாங்கத்தின் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. அந்த ராஜபக்ச குடும்பத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நாட்டு மக்களுக்கும் இந்த அரசாங்கத்துடன் தொடர்புடையவராகவே என்னைத் தெரியும். ஆனால், நான் நீதியமைச்சராக சுயாதீனமாகவே இயங்கினேன்.
தற்போதுள்ள அரசாங்கத்தின் மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்துள்ளமையை நான் அறிவேன். அதனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது நாடாளுமன்றில் இருக்கின்றவர்களில் 150க்கும் மேற்பட்டவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்” - என்றார்.