பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம மீள இலங்கைக்கு அழைப்பு.-- ஜனாதிபதி தெரிவிப்பு
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தனது வீட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாள் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து, மீள அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் மூலம், பிரித்தானியாவில் இலங்கையின் நற்பெயருக்கு உயர்ஸ்தானிகர் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வீட்டுப் பணியாள் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பிரித்தானிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ரோஹித போகொல்லாகம நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும், தமது அரசாங்கத்தில் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிர்காலத்தில் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாட்டு தூதரகங்களில் பல அரசியல் நியமனங்களும் தனது அரசாங்கத்தால் மாற்றியமைக்கப்படும் என்றும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களைத் தவிர வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணிபுரியும் பலர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்