வடக்கில், எலிக் காய்ச்சலை ஆராய்வதற்கு தனிக் குழுக்கள் கொழும்பில் இருந்து இன்றும் நாளையும் வரவுள்ளன.
வடக்கு மாகாணத்தில், எலிக்காய்ச்சலை விடவும் பல்வேறு காய்ச்சல்கள் பரவியுள்ளன என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் ஆராய்வதற்கு தனிக் குழுக்கள் கொழும்பில் இருந்து இன்றும் நாளையும் வரவுள்ளன.
வடமாகாணத்தில் எலிக் காய்ச்சல் மற்றும் அடையாளம் காணப்படாத இதர காய்ச்சல்கள் காரணமாக ஒவ்வொரு நாளும் பலர் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இது தொடர்பில் மத்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, முழுமையான ஆய்வு மற்றும் விசாரணைகளுக்காக இரண்டு குழுக்கள் இன்றும் நாளையும் கொழும்பில் இருந்து வரவுள்ளன.
இந்தக் குழுவின் ஆய்வின் பின்னர், வடக்கில் எலிக் காய்ச்சல் மட்டும் தான் பரவுகின்றதா அல்லது இதர வைரஸ் தொற்றுகளும் பரவுகின்றதா என்பது தொடர்பான முழுமையான விடயங்கள் தெரியவரும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரனால், வடமாகாண ஆளுநருக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, நோய் நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக தேவை ஏற்படின் மாவட்டத்தின் ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலிருந்து ஆளணியினரைப் பெற்றுப் பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.