ஜனாதிபதி அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சுக்கு அளவுக்கு அதிகமான நிதியை அள்ளி வழங்கியுள்ளது.

6 hours ago



ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சுக்கு அளவுக்கு அதிகமான தொகையை அள்ளி வழங்கியுள்ளது.

இதன்படி, 442 பில்லியன் ரூபா பாதுகாப்பு அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு, உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் பாதுகாப்பு அமைச்சுக்கு அளவுக்கு அதிகமான தொகை ஒதுக்கப்படுகின்றது என்று தேசிய மக்கள் சக்தியினர் கடந்த காலங்களில் விமர்சித்து வந்தனர்.

இவ்வாறிருக்கையில், தற்போது அவர்களின் ஆட்சியிலும், பாதுகாப்பு அமைச்சுக்குப் பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளமை பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது.

இதன் போது வரவு - செலவுத் திட்டத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்வைத்தார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 616 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 713 பில்லியன் ரூபா மேற்படி அமைச்சுக்கு ஒதுக்கப்பட் டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கு 442 பில்லியன் ரூபாவும், சுகாதார அமைச்சுக்கும், ஊடகத்துறை அமைச்சுக்கும் 507 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு 473.4 பில்லியன் ரூபாவும், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கு 406 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு 399.16 பில்லியன் ரூபாவும்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 496 பில்லியன் ரூபாவும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 271 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கு 175 பில்லியன் ரூபாவும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 54 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 207 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி பிற்பகல் இடம்பெறவுள்ளது.

பெப்ரவரி 27ஆம் திகதிக்கும் மார்ச் 21ஆம் திகதிக்கும் இடையில், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு மார்ச் மாதம் 21ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது. 





டி