தற்கால, முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு இப்போது குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை யென்ற நிலையில்தான் அது குறைக்கப்பட்டு வருகின்றது என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இங்கேயும் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் ஏதும் முன்னெடுக்கப்படுமென்ற வாய்ப்புகள் இல்லை. வசதிகள் இல்லை. அப்படி எதனையும் எதிர்பார்க்கவும் முடியாது.
அந்த வகையில் பாதுகாப்பற்ற நிலை இலங்கையிலேயே இல்லையென்றால், எங்களுடைய பிரதேசங்களிலே இராணும் எங்களது நிலத்தை ஆக்கிரமித்து தொடர்ந்தும் வைத்திருப்பது ஏன்? ஆகவே, தமிழர் தாயகத்தில் படை களின் பிரசன்னத்தைக் குறையுங்கள்!"- இவ்வாறு கேள்வி எழுப்பியியிருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்.
அவர் மேலும் தெரிவித்திருக்கின்றமை வருமாறு:-
ஆட்சிக்கு வந்திருக்கும் அநுர அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கவில்லை. நடுநிலைமையான நிலைப்பாட்டிலேயே நாங்கள் இப்போதும் இருக்கிறோம்.
எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்கள் புதிய அரசாங்கம்தான்.
நாங்கள் தமிழினமாக - தனித்துவமான அடையாளங்களோடு இருக்க வேண்டும் என்பது எங்களுடைய கொள்கையாக உள்ளது.
இதில் முக்கியமாக எங்கள் நிலம், மொழி, கலாச்சாரம் உள்ளிட்ட விடங்களில் தனித்துவத்தை நிலைநாட்டுகின்ற அரசியலை நாம் செய்து வந்திருக்கிறோம்.
இப்பொழுது தற்கால, முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு குறைக்கப்பட்டு உள்ளது.
ஏனெனில் அவர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்ற நிலையில்தான் அது குறைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இங்கேயும் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் ஏதும் முன்னெடுக்கப்படுமென்ற வாய்ப்புகள் இல்லை. வசதிகள் இல்லை. அப்படி எதனையும் எதிர்பார்க்கவும் முடியாது.
அந்த வகையில் பாதுகாப்பற்ற நிலை இலங்கையிலே இல்லையென்றால், எங்களுடைய பிரதேசங்களிலே இராணுவம் எங்களது நிலத்தை ஆக்கிரமித்து தொடர்ந்தும் வைத்திருப்பது ஏன்? இச்செயற்பாட்டால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மூன்றில் ஒரு பகுதியை படைகள் ஆக்கிரமித்து வைத்து இருக்கின்றன.
இவற்றை விடுவிப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.
ஆகவே, அரசாங்கம் இவற்றைக் கருத்திற் கொண்டு, வடகிழக்கில் முப்படைகளும் ஆக்கிரமித்து வைத்துள்ள தமிழ் மக்களின் நிலங்களை விடுவிக்க வேண்டுமென்று கட்சி ரீதியாக கோரிக்கையை முன்வைக்கிறேன்.
தமிழரசுக் கட்சிக்குள் உட்கட்சி விமர்சனங்கள், குறைபாடுகள் தொடர்பில் சில பேர் பேசி வருகின்றார்கள்.
கட்சிக்குள் உட்கட்சி பிரச்சினையோ வேறு ஏதும் பிரச்சினையோ வந்தாலும் நாங்கள் அவற்றை சமாளித்து சீராக்கி முன்னேறி இருக்கிறோம் என்பதை கடந்த காலத்தில் மக்கள் பார்த்திருப்பார்கள்.
அந்த வகையில் கட்சிக்குள் உள்முரண்பாடுகள் அல்லது எதிர்ப்புக்களை சுமூகமாகத் தீர்த்துக் கொண்டு முன்னேறி ஒரு கட்சியாக கட்டுக்கோப்புடன் தமிழரசு செயற்படும்.
அதற்கான செயற்பாடுகள் நடந்திருக்கின்றன. அத்தகைய நடவடிக்கைகள் தொடந்தும் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதியாகச் சொல்லி வைக்கிறேன்.
75ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட எங்களுடைய தமிழரசுக் கட்சியை கட்டிக் காப்பதற்கும் அதை முன்நோக்கி கொண்டு செல்வதற்கும் எல்லா மக்களுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம்.
ஆனாலும் கட்சிக்குள் எங்களிடையே சில குறைபாடுகள் இருக்கலாம். ஆகவே அவற்றை மேவி, தனித்துவமான ஒரே கட்சியாக எங்கள் கட்சி இருப்பதால் அதை ஆதரித்து, எங்களுடைய அரசியலை முன்கொண்டு செல்ல மக்கள் உதவ வேண்டும் அல்லது முன்வர வேண்டும்.
இதற்கு நியாயமான கருத்துக்களையும் நான் எதிர்பார்க்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் அண்மைக் காலமாக கட்சி தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை உண்மைதான்.
ஆனால் இந்த விமர்சனங்களுக்கு நான் பதிலளிப்பது கிடையாது.
ஆனால் அதிலும் சிலர் நியாயங்களையும் சொல்லி பதிலளித்து வருகின்றமையைப் பார்க்கின்ற போது இந்த மண்ணிலே நியாயங்கள் நிலை நிறுத்தப்படுகின்றன என்பதை உணர்ந்து அவர்களுக்கான நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
எமது தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பவள விழாவைக் கொண்டாட இருக்கிறோம்.
அந்த விழா இந்த முறை மட்டக்களப்பிலே நடத்த ஏற்பாடாக இருக்கிறது.
அதே நேரம் மாவட்ட ரீதியாகவும் நிகழ்வுகளை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்கிறோம்.
ஆகவே எமது மக்கள் ஒத்துழைப்பை வழங்கி வெளிப்படையாக முன்வந்து எங்களுடைய கட்சியை ஆதரிக்க வேண்டும்.
அதன் மூலமாக இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் மீண்டுமொரு செய்தியை சொல்லலாம்.
அதாவது தமிழரசுக் கட்சி தமிழ் மக்கள் சார்பாக பேசக் கூடிய அதிகாரம் பெற்றது, ஆணைபெற்றது என்பதை தொடர்ந்து வரும் தேர்தல்களின் மூலம் நிரூபிக்கலாம் என்பதைக் குறிப்பிட்டு, அதற்காக மக்களிடத்தே ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறது என்றார்.
நிலத்திலும் புலத்திலும் உள்ள உறவுகளுக்கு என் சார்ந்தும் எமது கட்சி சார்ந்த்துமாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.
அதே நேரம் ஒரு அலையாக வெற்றி பெற்று இப்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் அநுரகுமார திஸநாயக்க அவர்களிற்கும் அவருடைய அரசாங்கத்திற்கும் கூட எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ள விரும்புகிறோம்.
அதேநேரம் இந்த ஆண்டிலாவது 75 ஆண்டுடைய எங்கள் கட்சியின் வரலாறு இருக்கிறது.
போராட்டம் அல்லது தமிழ் மக்களுடைய உரிமை சார்ந்த முன்னெடுப்புக்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன.
ஆகவே எங்களுடைய அபிலாசைகளை - இலக்குகளை - தெரிந்து கொண்ட ஐனாதிபதி அநுரகுமார திஸா நாயக்கவின் அரசாங்கமும் இனப் பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தமிழ்த் தேசியத்தினுடைய தனித்துவத்தை பேணக்கூடிய வகையிலான ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்று ஐனாதிபதி தலைமையிலான அரசிடம் வேண்டுகோள் விடுத்து விண்ணப்பித்து கொள்கிறேன்.
எமது இந்தக் கோரிக்கையை அவர்கள் நியாயமாகப் பரிசீலித்து அதற்கான முன்முயற்சிகளை எடுப்பார்கள் என்றும் வெளிப்பாடுகளைத் தெரியப்படுத்தி எங்களை தனித்துவமாக கணித்து நாங்கள் நின்று பேசக்கூடிய வாய்ப்புக்களை அளித்து ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் இந்த அரசாங்கத்தை கேட்டு கொள்கிறேன்.
எங்களுடைய கட்சி அங்குரார்ப்பண கூட்டத்தில் தந்தை செல்வா ஆற்றிய உரையில் தமிழ்ப் பேசும் மக்களினுடைய - தமிழ்த் தேசிய இனத்தினுடைய சுயாட்சியை நோக்கியதான என்ற ஒரு கருத்தை முன்வைத்து, கூட்டாட்சி என்ற சமஷ்டி முறையிலான தீர்வையே அவர் முன்வைத்திருக்கிறார்.
இதற்கமைய கடந்த 75 ஆண்டுகளாக அதையே முன்வைத்து நாங்கள் அரசியல் செய்து வந்திருக்கிறோம்.
இப்பொழுது எல்லாத் தமிழ்க் கட்சிகளும் கூட அந்த நிலைப்பாட்டிலேயே தான் இருக்கின்றார்கள்.
சமஷ்டி என்ற அந்த நிலைப்பாடே அது. அது பிரிவினை அல்ல. அது பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்ற கருத்தோடு நாங்கள் உடன்படவும் இல்லை. நாங்கள் - பிரிவினைவாதிகளும் அல்லர்.
அந்த வகையில் இந்த சமஷ்டி என்ற கருத்தை முன்னெடுத்து பரிசீலித்து விவாதித்து ஒரு தீர்விற்கு வர வேண்டும் என்று கேட்கிறோம்.
இந்த ஆட்சியை பரந்த மனப்பான்மையோடு மக்கள் ஏற்றக் கொள்ளக் கூடிய நிலையில், எளிமையான ஜனாதிபதியாக நாங்கள் பார்க்கக் கூடிய அநுரகுமார இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்பதால் எங்களுடைய உரித்துக்களை வழங்க வேண்டுமென்ற கருத்து அவருடைய மனதில் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அந்த வகையில் இதற்கான தீர்வை முன்கொண்டு இன ஐக்கியத்தை இந்த நாட்டிலே ஏற்படுத்தியவராக அவர் மிளிர வேண்டுமென்றும் கோருகிறேன். - என்றார்.