பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கி வருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பௌத்த மதத்தைத் திரிபுபடுத்தும் 85 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.
தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தலைமையில் அண்மையில் கூடியபோது இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் சங்கைக்குரிய ஹாகொட விப்பசி தேரர், வணக்கத்துக்குரிய பேராசிரியர் மாவத்தகம பேமானந்த தேரர், சட்டத்தரனி கல்யானந்த தீரனாகம, சட்டத்தரணி ராஜா குணரத்ன, மதுகம செனவிருவன் மற்றும் கலாநிதி வசந்த பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.
'காரக சங்க சபையின்' முடிவுக்கு அமைய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காத பிக்குமார் யாராவது துறவறத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும் அவர்கள் காவியுடை அணிவதைத் தடைசெய்யும் அதிகாரம் காரக சங்க சபைக்கு இல்லையென்பதால் இது குறித்து சட்டரீதியான திருத்தங்களைக் கொண்டு வருவதன் அவசியம் குறித்து இங்கு ஆராயப்பட்டது. அத்துடன் பிக்குமாரின் பெயருடன் காணப்படும் போலி நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தல், புத்தர் பற்றிய கட்டுக்கதைகளை பரப்புதல், தேரர்களை இழிவுபடுத்தும் விதத்தில் பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்து கலந்துகொண்டவர்கள் எடுத்துக்காட்டுகளுடன் இங்கு விரிவாக விளக்கமளித்தனர். பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள் பெருமளவில் பிரபல்யப்படுத்தப்படுவதாகவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டினர். இவற்றைத் தடுப்பதற்கான அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இதற்கமைய, இன்னும் இரண்டு கூட்டங்களின் பின்னர் குறித்த பரிந்துரையை அறிவுறுத்தலாகத் தயாரித்து மகாநாயக்க தேரர்களைத் தெளிவுபடுத்தி அவர்களின் முன்மொழிவுகளையும் பெற்று பாராளுமன்றத்தில் அதனை முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.