இனப்பிரச்சினை தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜே.வி. பி இன்னும் தெளிவாக்கவில்லை.--பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு
தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பான அவர்களின் கடந்த கால நிலைப்பாடுகள் காரணமாக, எனக்கு அவர்களுடன் அதிக உடன்பாடு இல்லை.
இனப்பிரச்சினை தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜே.வி. பி இன்னும் தெளிவாக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-
இந்த அரசாங்கத்தின் கவனத்துக்கு ஒரு முக்கிய விடயத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். பொதுப் பாதுகாப்பு அமைச்சரும் எனது நல்ல நண்பருமான நீதி அமைச்சர் இங்கு வந்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த சில நாட்களுக்கு முன் அவரது கருத்துக்கள் தொடர்பாக தெரிவிக்க வேண்டும்.
ஜே.வி.பியுடன் இணைந்த தேசிய மக்கள் சக்தியின், தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பான அவர்களின் கடந்த கால நிலைப்பாடுகள் காரணமாக, எனக்கு அவர்களுடன் அதிக உடன்பாடு இல்லை.
இனப்பிரச்சினை தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜே.வி.பி இன்னும் தெளிவாக்கவில்லை.
மேலும் அரசாங்கத்தில் உள்ள சில உறுப்பினர்கள் பல விடயங்களில் மிகவும் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டுள்ளனர் என்பதையும் நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று இந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாகும்.
நான் மட்டுமல்ல ஜே.வி.பியே உடன்படாத ஒரு சட்டமுமாகும்.
இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஜே. வி.பியே கண்டித்திருக்கிறது.
ஏனென்றால் அவர்களும் இச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டார்கள்.
தேர்தலின் போதும் அதற்கு முன்பும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று கூறப்பட்டது.
2015 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது.
ஆனால் தேர்தல்கள் முடிந்தபின், அப்போதைய அரசாங்கம் முதல் வாரத்திலேயே அந்த உறுதிப்பாட்டில் இருந்து மிக விரைவாக பின்வாங்கிவிட்டது.
நினைவேந்தலின் போது கூட பயங்கரவாத தடைச்சட்டத் தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சில கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னரே காவல்துறையினர் நீதிமன்றங்களுக்குச் சென்று தம்மால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பி அறிக்கைகளில் இருந்த பயங்கரவாத குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றிருந்தனர்.
நீங்கள் இந்தச் சட்டத்தை கொடூரமானது என்று சொல்கிறீர்கள், காவல்துறையோ அதை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
அவர்கள் அதை எப்போதும் தவறாகப் பயன்படுத்துவார்கள். இது இந்த பயங்கரமான சட்டத்தின் வரலாறாகும்.
உங்கள் அரசாங்கம் வேறுவிதமாக இருக்க விரும்பினால், நீங்கள் நெறிமுறையாக இருக்க விரும்புகிறீர்கள் என்றால் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற உங்களின் முந்தைய கொள்கையிலிருந்து நீங்கள் ஒருபோதும் பின்வாங்க முடியாது.
தேவைக்கேற்றவாறு நீங்கள் கொள்கையை மாற்றியமைக்க முடியாது.
கிளிநொச்சி கோணாவில் பாடசாலைக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சென்று ஆசிரியர்களை விசாரணை செய்ய முயன்றுள்ளனர்.
இல்ல விளையாட்டுப் போட்டியின் போது அலங்காரம் செய்தமைக்கு கூட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.
வடகிழக்கிற்கு வேறு வடிவத்தை நீங்கள் கொண்டிருக்க முடியாது.
அது நீங்கள் கூறும் நெறிமுறைக்கு புறம்பானதாக அமையும்.
சிலர் கூச்சலிடுவதால், உங்க நிலைப்பாட்டை மாற்ற முடியாது.
நீங்கள் புதிய கலாசாரத்தை உருவாக்க போகிறீர்கள் என்றால் நீங்கள் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் செயற்பட வேண்டும்.
நீங்கள் அதே முந்தைய அரசாங்கங்களின் பாதையில்தான் செல்வீர்களாயின் அதே போன்றே பாதிக்கப்படுவீர்கள் -என்றார்.