தேச காலக் கடமையில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து நின்ற எழுத்தாளர் ஆ.ந.தீயின் மூன்று நூல்கள் சிட்னியில் வெளியீடு

3 weeks ago



தேசத்துக்கான காலக் கடமையில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து நின்ற எழுத்தாளர் ஆ.ந.தீயின் மூன்று நூல்களின் வெளியீடு நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் வென்ட்வேத்வில் சமுதாய மண்டபத்தில் நடைபெற்றது.

அவுஸ்திரேலியா தமிழ்த்தாய் பதிப்பக வெளியீடாக 'காலத்தின் பரிசு' எனும் சிறுகதை நூலும், 'சாகாத சான்று' எனும் குறும் புதின நூலும் 'பகலாகிய இரவுகளும் இரவாகிய பகல்களும்' எனும் தலைப்பில் பொதுக் கட்டுரை ஆக்க நூலும் இந்த நிகழ்வில் வெளியாகின.

எழுத்தாளர் ஆ.ந.தீயின் துணைவியும் அவரின் மகனும் போர் வாழ்வின் வலிகளைக் கடந்தும் தொடரும் இடர்களை எதிர்கொண்ட போதும், விடுதலைப் பணியாகக் காலத்தின் பதிவுகளை மூன்று நூல்களாக வெளியீட்டு                வைக்கின்றனர்.

எழுத்தாளர் ஆ.ந.தீயால் போருக்குள்ளும் போரின் பின்னரும் எழுதிய படைப்புக்களின் வெளியீடான இந்த நூல் வெளியீட்டு விழாவில் பெருந்திரளான சிட்னி மக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பல இலக்கிய ஆர்வலர்களும், தமிழ் பற்றாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கடந்த முப்பதாண்டு காலமாக எழுதி வரும் படைப்பாளியான ஆ.ந.தீ என்ற பெயரில் மட்டுமன்றிக் கற்பகன், வர்ணன், ஆ.ந.பொற்கோ, பொலிகையூரான், நகுலா ஆனந்தன், தீவண்ணன், வைகை ஆகிய புனைபெயர்களிலும் எழுதி வந்துள்ளார்.

தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மீதான பெருவிருப்பே இவரது படைப்புகளின் கருக்களாய் உருப்பெற்றிருக்கின்றன.

நாம் கடந்து வந்த வாழ்வை, நாம் சந்தித்த மனிதர்களை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கச் செய்யும் படைப்புகள் இவை.

அந்த வகையில் இக்கதைகள் ஒரு காலத்தின் கதைகள். ஒரு காலத் தின் துயரங்கள்.

பல ஆண்டுகளாக எமது மண் சந்தித்த பல துயர வரலாற்றையும் அதனால் எழுந்த வாழ்வியல் கோலங்களையும் தியாகங்களையும் பேசும் படைப்புகள் என்று மூத்த தமிழ் பெண் எழுத்தாளர் திருமதி தாமரைச் செல்வி தெரிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்