இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி தமிழக மீனவர்களை அச்சுறுத்தினர் என இந்திய ஊடகங்களில் செய்தி.
இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி தமிழக மீனவர்களை அச்சுறுத்தினர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதில் மேலும் தெரிவித்தவை வருமாறு-
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
கச்சத்தீவு அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும் வானத்தை நோக்கி துப்பாக் கியால் சுட்டு மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் விரைந்து கரைக்குத் திரும்பினர்.
இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபடியான ரோந்துக் கப்பலில் இலங்கைக் கடற்படையினர் வந்தனர் என தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அட்டூழியத்தால் ஒரு படகிற்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இலங்கைக் கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு மத்திய மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.