வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயம்

6 months ago

வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியவர்களுடைய பெயர் விபரங்கள் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட போதும், அவர்களை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

சம்பவதினமன்று சங்கரத்தை சிறிமுருகன் பேக்கரிக்கு அருகில் வீதியோரமாக இருவர் அமர்ந்திருந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.

இதன் போது அவ்வீதியால் சென்ற பெண் ஒருவருடன் இவர்கள் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

இதனை குறித்த பேக்கரியில் வேலை செய்யும் அப் பெண்ணின் சகோதரர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவரும் அவ்விடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் இரவு 7.20 மணியளவில் குறித்த பேக்கரிக்கு வந்த அந்த நபர்கள் அத்துமீறி உள்நுழைந்து, அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் சகோதரர் மீது சரமாரியாக வாள்வெட்டுத்தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் கையில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்ட சிவகுமார் கஜந்தன் (வயது) 33) என்பவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இவ்வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியவர்களுடைய பெயர், விபரங்களும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இது குறித்த எந்தவிதமான விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பிக்கவில்லை என்றும், நேற்று இரவுவரை வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸார் மீது தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.