2026 தேர்தலை மானப் பிரச்சினையாக கையில் எடுத்திருக்கிறது அ.தி.மு.க மக்கள் பிரச்சினையை முன்னிறுத்தி போராட ஆரம்பித்திருக்கிறது

1 week ago



11ஆவது முறையாகவும் தோற்க முடியாது என்பதால் 2026 தேர்தலை மானப் பிரச்சினையாக கையில் எடுத்திருக்கிறது அ.தி.மு.க.

அதற்காக மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட ஆரம்பித்திருக்கிறது அந்தக் கட்சி.

கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி.

“கட்சியில் நீண்ட காலம் பதவி சுகம் அனுபவித்தவர்கள் பணத்தை செலவழிக்க வேண்டும்.

ஆளுங்கட்சிக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தேர்தலுக்குள் 10 ஆர்ப்பாட்டங்களையாவது நடத்த வேண்டும்." என்றார்.

இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாக மருந்தாய் அமைந்தது.

அமைச்சர்களாக இருந்து அதிகாரத்தை சுவைத்தவர்கள் பணத்தை வெளியில் எடுத்தால் தான் என்ன... என்ற தங்களின் மைண்ட் வாய்ஸை கே.பி. முனுசாமி சத்தமாக பேசிவிட்டதாகவே தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

முனுசாமியின் குரலை எடப்பாடி பழனிசாமியும் முன்மொழிந்ததை அடுத்து அதற்கு பலனும் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம், மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேராவூரணி பேரூராட்சி முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட் டம் - என அ.தி.மு.கவின் போராட்ட அறிவிப்பு பட்டியல் நீள்கிறது.

இதைத் தானே எதிர்பார்த்தோம் என்பது போல் அ.தி.மு.க. தொண்டர்களும் உற்சாகத்துடன் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் ஆளுங்கட்சியை பதம் பார்க்க அ.தி.மு. கவுக்கு இன்னொரு அஸ்திரமாக கிடைத்துள்ளது.

லண்டனில் அரசியலை படித்துத் திரும்பி இருக்கும் அண்ணாமலை சாட்டையடி, மகளிர் நீதிப் பேரணி உள்ளிட்ட வினோத போராட்டங்கள் மூலம் மக்களை ஈர்த்து வருகிறார்.

இதன் மூலம் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி நாங்கள் தான் என நிரூபிக்க முயல்கிறது பா.ஜ.க.

அதற்கு இடம் தராமல் தனது இடத்தை தக்க வைக்க வேண்டிய நெருக்கடி அ.தி.மு.கவுக்கு இருக்கிறது.

இது குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் கருத்து தெரிவிக்கையில்,

"ஊடகங்களும், சமூக ஊடகங்களும் தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

நாங்கள் நடத்தும் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்கள் மூலம், அதே ஊடகங்களும், சமூக ஊடகங்களும் 2026 தேர்தலின்போது எங்களை நோக்கி திரும்பும்.

அதற்காக பல புதிய வியூகங்களை அமைத்து வருகிறோம்.

அ.தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், 2026 தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தி, ஆட்சியமைக்க உதவும். அண்ணாமலையின் அரசியலை, அ.தி.மு.க. அரசியலுடன் ஒப்பிட முடியாது.

அ.தி.மு.க.மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வருகிறது.

அண்ணாமலை, அதானிகளின் நலனுக்காக போராடக் கூடியவர். அவரது அரசியலும், போராட்டங்களும் விளம்பரத்துக்காக செய்யப்படுகிறது.

மக்கள் நலனுக்காக இல்லை. இதை தமிழக மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்." - என்றார்.

தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாக ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்களை நடத்தி ஆட்சியைப் பிடிப்பது ஜெயலலிதா 'ஸ்டைல்'. அந்த வகையில் இப்போது ஆர்ப்பாட்டங்களை நடத்த ஆரம்பித்திருக்கிறார் பழனிசாமி.

அண்மைய பதிவுகள்