சர்வதேச சிறுவர் தினமான செவ்வாய்க்கிழமை வடக்கு, கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம். சி. ஜெனிற்றா தெரிவிப்பு.
சர்வதேச சிறுவர் தினமான நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் கவனவீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி. ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளன. இறுதி யுத்தத்தின்போது சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் ஷெல் வீச்சுகளாலும் விமான குண்டு தாக்குதல்களாலும் உடல் சிதறிப் படுகொலையாகினர்.
இதற்கு இதுவரை நீதி கிடைக்க வில்லை.
இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்தவர்கள் தங்களின் பிள்ளைகளை இராணுவத்தின் கையிலே ஒப்படைத்தனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் என்ன நடந்தது? சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம்.
எமது உறவுகள் எத்தனை பச்சிளம் குழந்தைகளையும் பாடசாலை மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்கின்றனர். இவர்களை உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள்.
சர்வதேச சிறுவர் தினமான ஒக்ரோபர் முதலாம் திகதியன்று வடக்கு, கிழக்கு தழுவி கவனவீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
வவுனியாவில் அன்று முற்பகல் 10 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட வுள்ளது.
இந்தப் போராட்டங்களில் அனைவரும் பங்கேற்க வேண்டும் - என்றார்.