யாழ்.கீரிமலை நகுலேஸ்வரத்துக்கு காண்டாமணி லண்டனில் தயார்

6 months ago

யாழ்.கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் நிறுவப்படுவதற்காக பாரிய காண்டாமணி லண்டனில் தயாராகியுள்ளது.

43 அங்குல விட்டம், 34 அங்குல உயரம் மற்றும் 750 கிலோ எடை கொண்ட இந்த அழகான காண்டாமணி நற்பதா யிரம் பிரித்தானியா பவுண்கள் (இலங்கை பணம் சுமார் ஒரு கோடி 60 லட்சம் ரூபர்) செலவில் தயார் செய்யப்பட்டுள்ளது. 

அமரர் இராஜஸ்ரீநகுலேஸ்வரக் குருக்கள் ஐயா முதல் முறையாக 1989 ஆண்டு லண்டன் சென்ற சமயம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு லண்டனில் காண்டாமணி ஒன்று செய்யவேண்டும் என்ற திருப்பணியை ஆரம்பித்து வைத்தார்.

பலவித காரணங்களால் 35 ஆண்டுகள் கழித்து, குருக்கள் ஐயா சென்ற ஆண்டு மறைந்த பின்னர், இந்த ஆண்டு இம்முயற்சி நிறைவேறுகின்றது. 

மணியின் அனைத்து வேலைகளும் நிறைவுபெற்று, லண்டனில் மணி வார்க்கப்பட்ட தொழிலகத்தில் திருக்கைங்கரியம் புரிந்த சைவப்பெரியோர்கள், தொழிலகத்தின் பொறுப்பாளர் உள்ளிட்ட பெருந்தகையோர் சூழ, கயிலைக்குருமணி நாகநாதசிவம் சிவாச்சார்யார் தலைமையில் விசேட பூஜை பிரார்த்தனை கடந்த வியாழக்கிழமை 27 ஆம் திகதி நடை பெற்றது.

இத்தகவல்களை வெளியிட்ட அகில இலங்கை இந்து கலாச்சார பேரவையின் தலைவர் சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை.க.வைத்தீஸ்வர குருக்கள், மிக விரைவில் இக்காண்டாமணி கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் நிறுவப்பட்டு மகா கும்பாபிசேஷகம் நடைபெறத் திருவருளும் குருவருளும் ஒருசேர கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்திருப்பணியை ஆரம்பித்து மிகவும் குறுகிய காலத்தில் அதனை நிறைவு செய்த பிரித்தானியா கீரிமலை சிவன் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினரைப் பாராட்டி மகிழ்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.