அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தில் கை வைக்கும் உரிமை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை - தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவிப்பு

6 months ago

பௌத்த மத அடிப்படையில் வாழ்வது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே எனவும் அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தில் கை வைக்கும் உரிமை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை என அதன் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி எனப்படும் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலை நோக்கிச் சமீபகாலமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க லண்டனில் பௌத்த சமயத்தை முன்னிலைப்படுத்திக் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தில் பௌத்த மதம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இரத்து செய்யப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி மற்றும் பௌத்த மதம் இரண்டிற்கும் இடையே மோதல்களை உருவாக்குவது மத அடிப்படையில் வாழாதவர்களே என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பௌத்த மதத்திற்கான அவதானங்கள் குறைவடையும் என பரவும் பேச்சுக்கள் தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், எங்களுடைய எதிர்த்தரப்பினருக்கு எங்களை பற்றிய அவதூறான கருத்துக்களை பரப்புவது வேலையாக மாறியுள்ளது.

மத அடிப்படையில் வாழ்வது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. இது தொடர்பில் சொல்லப்படும் அவதூறான கருத்துக்கள் மிகவும் தவறானவை.

அரசியலமைப்பின் 9வது சரத்தில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் ஒரு போதும் இரத்து செய்யப்படமாட்டாது.

2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையில் இலங்கையில் அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடல்களில் தலைமை வகித்தவர் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க.

அந்த கலந்துரையாடலில் அரசியலமைப்பின் 9வது சரத்தை மாற்றுவது குறித்து கலந்துரையாடப்படவில்லை.

அனைவரும் 9வது சரத்தை ஏற்று கலந்துரையாடினர். அதனால் இது தேவையற்ற ஒரு அச்சம். 9 ஆவது சரத்தில் கை வைக்க மாட்டோம். அதில் கைவைக்க வேண்டிய தேவை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு கூட இல்லை என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேசிய மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இடதுசாரி எனக் கூறிக் கொண்டு பிரச்சாரம் நடத்துவது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின்படி, 9 ஆவது சரத்தில் இலங்கை குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மை தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்