குஜராத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள 'ஹராமி நல்லா' சிற்றோடை பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் இருப்பர். எல்லைப் பகுதி என்பதால் இந்தப் பகுதியில் வீரர்கள் தொடர்ந்து ரோந்து சுற்றி வருவர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மேலும் அனல் காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி, ஒரு ஜவான் ஆகியோர் நேற்று முன்தினம் கடும் வெப்பம் காரணமாக மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மீட்டு பூஜ் பகுதியில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இருவருக்கும் வெப்ப பக்கவாதம் மற்றும் நீரிழப்பு ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் உதவி கமாண்டண்ட் விஸ்வதேவ், ஹெட் கான்ஸ்டபிள் தயாள் ராம் எனத் தெரியவந்துள்ளது. இதில், விஸ்வதேவ் எல்லை பாதுகாப்புப்படையின் 59-வது பட்டாலியனை சேர்ந்தவர் ஆவார்.