வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கவும்.--காணி உரிமை மக்கள் கூட்டணியின் சந்திப்பில் கோரிக்கை
வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பார்ல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியின் வட பிராந்திய சந்திப்பு நேற்றையதினம் காலை யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த நிறுவனத்தின் இயக்குநர் சதுண் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளராக பிரியங்கரவும் கலந்து கொண்டார்.
இதன்போது, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு, வடக்கிலுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை உள்ளடக்கியதாக 6 பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஆறு பேரும் எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டத்தில் இடம்பெறும் உயர்மட்ட கலந்துரையாடல்களில் பங்குபற்றி அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள்.
அந்த வகையில் யாழ். மாவட்டத்திலிருந்து முரளிதரன் மற்றும் சாருஜனும் முல்லைத்தீவிலிருந்து கலைச்செல்வன், டயாணியும் மன்னாரிலிருந்து ரகீமும் கிளிநொச்சியிலிருந்து அச்சுதனும் வடமாகாண பிரதிநிதியாக. முரளிதரனும் தெரிவு செய்யப்பட்டனர்.
குறித்த சந்திப்பில் பங்கேற்ற பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால், "வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க உதவுமாறும், வடக்கிலுள்ள சட்டவிரோத பௌத்த விகாரைகளை அகற்றுமாறும், தொல் பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறும், அபிவிருத்தி எனும் பெயரில் மக்களின் காணிகளை சுவீகரிப்பதை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகளை பார்ல் நிறுவன அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.
இதில், வடக்கு மாகாணத்தை சேர்ந்த பொது அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.