எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னர் எடுத்த தீர்மானத்துக்கு அமைய தனித்தே போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னர் எடுத்த தீர்மானத்துக்கு அமைய தனித்தே போட்டியிடும்.
எனினும், தேவைப்படும் இடங்களில் ஏனைய கட்சிகளுடன் கூட்டமைத்து போட்டியிடுவது என்று அந்தக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இல்லத்தில் கூடியது.
கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் மறைந்த தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப்பட்டன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று கருதப்படும் உள்ளூராட்சி தேர்தலில் கட்சி முன்னர் தீர்மானித்தது போன்று தனித்தே போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
எனினும், தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோகும் என்று கருதப்படும் சபைகளில் மாத்திரம் கூட்டாகப் போட்டியிடுவது என்றும் இது தொடர்பில் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுடன் பேசுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதேபோன்று, உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் பதில் தலைவரும் பதில் பொதுச் செயலாளரும் தீர்மானித்து செயல்படுவது என்றும் இணக்கம் காணப்பட்டது.
இதேநேரம், புதிய ஒற்றையாட்சி அரசமைப்புக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதில் தலைவருக்கு எழுதிய கடிதம் கூட்டத்தில் வாசித்துக் காட்டப்பட்டது.
இது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட 7 பேர் குழுவிலிருந்து சாணக்கியன் எம். பி. விலகினார்.
அவர், தனது இடத்துக்கு சிறீநேசன் எம்.பியை நியமிக்குமாறு சிபாரிசு செய்தார்.
மேலும், புதிய அரசமைப்பு தொடர்பான விடயங்களை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என்று ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்ட சுமந்திரன் வலியுறுத்தினார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒழுக்காற்று குழுவும் மாற்றியமைக்கப்பட்டதுடன், அதன் தலைவராக த. குருகுலராஜா நியமிக்கப்பட்டார்.
இதேபோன்று, கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடலத்துக்கு கட்சிக் கொடி போர்த்தப்பட்ட விவகாரம் தொடர்பிலும் பேசப்பட்டது.
கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்டவர் (பா.அரியநேத்திரன்) எவ்வாறு கட்சிக் கொடியை போர்த்த முடியும் என்றும் இது தொடர்பில் விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
