ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று கையெழுத்திட்டார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி யடைந்திருந்தார்.
அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார்.
இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்கு அவர் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், தமிழரசுக் கட்சியில் அவருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை.
தமிழரசுக் கட்சியின் இந்த வேட்பாளர் தெரிவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடாவடித்தனமாகப் பல்வேறு குளறுபடிகளைச் செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு நியமனத்தைக் கொடுத்துள்ளார் என்று சசிகலா நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
"எனக்கு மட்டுமல்லாது கட்சியின் நீண்ட கால உறுப்பினர்கள் பலருக்கும் வேட்பாளர் நியமனம் கொடுக்கப்படாமல் தனக்குத் தேவையானவர்களுக்கே சுமந்திரன் நியமனம் கொடுத்துள்ளார்." - என்றும் சசிகலா குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையடுத்து தமிழரசுக் கட்சியில் இருந்து இன்று காலை வெளியேறிய சசிகலா, ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சின்னமான சங்குச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்று பிற்பகல் கையெழுத்திட்டுள்ளார்.