இயற்கை அனர்த்தத்தால் சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்க சீனாவால் 30 மில்லியன் ரூபா நிதி உதவி திறைசேரிக்கு
இலங்கையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 வரை, இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சீன மக்கள் குடியரசினால் வழங்கப்பட்ட சுமார் 30 மில்லியன் ரூபா நிதி உதவி திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த மக்களின் வீடுகளை புனரமைப்பதற்காக தேசிய வரவு செலவுத்திட்டதிணைக்களத்தில் இருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம் அந்த நிதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் போதுமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாததால், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருந்தது.
மேலும், அவசரகால மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் சீன மக்கள் குடியரசில் இருந்து கிடைக்கவுள்ள 10 மில்லியன் பொருள் உதவி மற்றும் பொருட்கள் பெறப்பட்டவுடன் முறையான கணக்குப்பதிவுக்குப் பிறகு விநியோகிக்கப்பட உள்ளன.
மேலும், சேதமடைந்த வீடுகள் மற்றும் உடைமைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குதல், வீடுகளின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளையும் அனர்த்த நிவாரணம் மற்றும் கண்காணிப்புத் திட்டத்தின் ஊடாக விரைவாக நிறைவேற்றவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.