யாழ்.அனலைத்தீவு பிரதேச மக்களுக்கான ஆலோசனை சேவை வழங்கலும் நடமாடும் சேவையும்.

4 months ago


யாழ்.அனலைத்தீவு பிரதேச மக்களுக்கான ஆலோசனை சேவை வழங்கலும் நடமாடும் சேவையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலக ஏற்பாட்டில் இடம்பெற்றது

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்தல் தொடர்பான நடமாடும் சேவை ஒன்றை இன்று 29.08.2024 ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட, அனலைத்தீவு பிரதேசத்தில் நடாத்தியது

1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக தாபிக்கப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது தலைமை காரியாலயம் மற்றும் 10 பிராந்திய அலுவலகங்களையும் சில உப அலுவலங்களையும் கொண்டுள்ளது. எனவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சேவைகளை தீவுப் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கும் நோக்குடனும், ஏனைய நிறுவனங்களின் சேவைகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்குடனும், முறைப்பாடுகள் மேற்கொள்வதில் மக்களுக்கு உள்ள இடர்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடனும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நடமாடும் சேவையில் ஊர்காவற்றுறை பிரதே செயலாளர் திருமதி மஞ்சுளா சதீசன் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி கபிலன் விவ்லவராஜன் ஆகியோர் கலந்துக்கொண்டதுடன் பின்வரும் அரச நிறுவனங்களும் கலந்துக்கொண்டு மக்களுக்கு ஆலோசனைகளை வழஙகினர்

1. பிரதேச செயலக காணி பிரிவு அதிகாரி

2. மேலதிக மாவட்ட பதிவாளர்

3. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்

4. மாகாணக் காணி நிர்வாகத் திணைக்களம், வடக்கு மாகாணம்

5. வலயக் கல்விப் பணிமனை, தீவக வலயம்

6. பொலிஸ் நிலையம், ஊர்காவற்றுறை

7. கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம்

இந்த நடமாடும் சேவையில் அனலைத்தீவு மக்களது சமூக பொருளாதார உரிமைகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டதுடன் அனலைத்தீவில் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைக்கும் விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.