55 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் குகை ஒன்று இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். இந்தக் குகையானது எதிர்காலத்தில் விண்வெளிக்கு செல்லும் நூற்றுக்கணக்கான வீரர்கள் தங்கி ஆய்வுசெய்ய வசதியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இத்தாலி நாட் டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், நிலவில் குகை இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த குகை குறைந்தபட்சம் 130 அடி (40 மீற்றர்) அகலமும், பலநூறு மீற்றர் நீளமும் இருக்கலாம் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
நிலவில் அமைந்துள்ள இந்தக் குகைகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மர்மமாகவே இருப்பதாகவும், மேலும் நிலவில் அமைந்துள்ள பள்ளங்கள் குடிநீரையும், ரொக்கெட் எரிபொருளையும் வழங்கக்கூடிய உறைந்த நீரை வைத்திருப்பதாக நம்பப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நிலவில் நூற்றுக்கணக்கான குழிகள் மற்றும் ஆயிரக்கணக்கான எரிமலைக் குழாய்கள் இருக்கலாம் என்று கண்டு பிடிப்புகள் தெரிவித்திருந்தன.
அத்தகைய இடங்கள் விண்வெளி வீரர்களுக்கு இயற்கையான தங்குமிடமாக செயல்படும். அவை காஸ்மிக் கதிர்கள் மற்றும் சூரிய கதிர்வீச்சு மற்றும் மைக்ரோ - விண்கல் தாக்குதல்களில் இருந்து விண்வெளி வீரர்களை பாதுகாக்கும் என்று விஞ்ஞானிகளின் ஆய்வின் மூலம் நம்பப்படுகிறது.