காசாவில் மேலும் 6 பணய கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

4 months ago


காசாவில் மேலும் 6 பணய கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

பலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உட்பட 250க்கும் அதிகமானோரை பணய கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றனர்.

இதை அடுத்து ஹமாஸ் அமைப்பை அடியோடு அழித்து பணய கைதிகளை மீட்டுக் கொண்டு வருவோம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. சுமார் 10 மாதங்களாக நடந்து வரும் இந்த போரால், பாலஸ்தீனத்தில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். மீதம் உள்ள பணய கைதிகளை மீட்கவும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கொண்டுவரவும் அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

அதே சமயம் காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி பணய கைதிகளையும் மீட்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் இராணுவத்தினர் தெற்கு காசாவில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, 6 பணய கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் சுமார் 110 இஸ்ரேலிய பணய கைதிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இருப்பினும் இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்