யாழில் நாளை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிஸாரின் மனுவை யாழ். நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்தது

யாழ்ப்பாணத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிஸாரின் மனுவை யாழ். நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ள நிலையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் நேற்றுபுதன்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன், தற்காலிக சுகாதார உத்தியோகஸ்தர்கள் சங்க தலைவர் எஸ்.ஜெஸ்மின் ஆகிய ஐவரின் பெயரை குறிப்பிட்டு, நாளைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போராட்டங்களை நடாத்த தடை விதிக்க வேண்டும் என பொலிஸார் மன்றில் மனு தாக்கல் செய்தனர்.
குறித்த மனு மீதான விசாரணைக்காக பெயர் குறிப்பிட்ட ஐந்து நபர்களையும் மன்றில் முன்னிலையாகுமாறு மன்று அழைப்பு கட்டளை நேற்றைய தினம் விடுத்திருந்தது.
அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, அழைப்பு கட்டளை வழங்கப்பட்ட நபர்கள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
அதில் வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவரின் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கையை முன் வைத்து, ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக அமைதியான வழியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
அமைதியான முறையில் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் விடுக்காது, எமது கோரிக்கையை முன் வைத்து போராடவுள்னர் அதற்கு மன்று அனுமதி வழங்க வேண்டும் என விண்ணப்பம் செய்தார்.
சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை அடுத்து, உயர் பாதுகாப்பு வலயமாக கட்டமைக்கப்படும் பகுதிக்குள் செல்லாது, ஜனாதிபதி வரும் பாதையில், வீதிக்கு குறுக்காக செல்லாது, வீதியின் ஓரமாக கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுக்க மன்று அனுமதித்தது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
