ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயாராக உள்ளேன் என்று ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் திருமதி அனந்தி சசிதரன் அறிவித்துள்ளார்.
அத்துடன் என்னை விடவும் ஆற்றலுள்ள வேறு எவரேனும் நம்பகமானவர் நிறுத்தப்படுவாரானால் அவரை நான் ஆதரிக்கவும் தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஈழத் தமிழரின் பிரதேச வாரியான பிரதிநிதித்துவம் தவறாக பயன்படுத்தப்படவும், எமது இனத்தின் அரசியல் வேணவா மறுக்கப்படவும் மலினப்படுத்தப்படவும் தேர்தல்கள் ஓர் அரசியல் வெளியாகி விடக்கூடாது.
எமது மக்களில் பெரும்பான்மையினரின் ஜனநாயக ஆணை இல்லாதோர் எமது பிரதிநிதிகள்போல வந்து எமது வேணவாவை திரிபுபடுத்தாமல் இருக்கவும் பிரதேச ரீதியான தேர்தல் அரசியலை தடுப்பு உத்தியாகவும் பயன்படுத்தவே பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி தேர்தல்களில் தமிழர்களான நாம் பங்கேற்கிறோம்.
ஈழத் தமிழருக்கான சர்வதேச அரசியலை முன்னெடுப்பதில் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையற்ற சூழல் உருவாகியுள்ளது.
ஆதலால், கட்சி அரசியலுக்கு அப்பால்பட்ட நிலையில் ஈழத் தமிழருக்கான ஒரு பொதுப் பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அவரை ஈழத் தமிழர்களின் நிழல் ஜனாதிபதியாக சர்வதேசம் கணிப்பிடும் நிலையை தோற்றுவிப்பதே காலத்தில் தேவையாக உள்ளது.
இருப்பினும், இதை சரிவர செய்யவேண்டுமானால் எமது தேசத்தை ஆக்கிரமித்துள்ள தேசத்தின் ஜனாதிபதி வேட்பாளர் எவரையும்விட அதிக வாக்குகளைப் பெறும் வகையில் தமிழ் பொதுவேட்பாளர் இருக்க வேண்டும்.
அவர் எமது நிழல் ஜனாதிபதியாக இயங்க வேண்டும்.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இனவழிப்பு போரில் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி குரலாக சர்வதேசமாக பங்கேற்ற தன்மைகளோடு பயணித்து அனுபவமுள்ளவனான நான் அந்தக் களத்தில் பயிற்சி பெற்றுள்ள அனுபவத்தோடு துணிந்து களமிறங்கத் தயாராக உள்ளேன்.
எந்தக் கட்சியினதும் அல்லது கூட்டினதும் பிரதிநிதியாக அன்றி ஈழத்தமிழருக்கான பொது பிரதிநிதியாக என்னை மாற்றிக்கொள்ளவும் பொருத்தமான கொள்கை வகுப்பு மேற்கொள்ளப்படும் போது அதற்கு கட்டுப்பட்டு இயங்கவும் தயாராக உள்ளேன்.
அதுமட்டுமின்றி இவ்வாறான தன்மைகளோடு என்னை விடவும் ஆற்றலுள்ள வேறு எவரேனும் நம்பகமாக நிறுவப்படக்கூடிய வகையில் முன்வைக்கப்பட்டால் அவ்வாறான வேட்பாளரை ஆதரிக்கவும் நான் தயாராக உள்ளேன்.
இதற்கு பொருத்தமான கொள்கை வகுப்பை ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழர் பொதுச்சபை மேற்கொள்ளவேண்டும்.
இதைச் சரிவர மேற்கொள்ள இயலுமா என்பதை நிறுவுவதும் அதை நடை முறையில் சாதிப்பதும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர் தேசத்தின் சமூகப் பொறுப்பாகும் - என்றார்