புகலிடக் கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியா நவ்று தீவு தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்ததன் மூலம் மனித உரிமைகளை மீறியுள்ளது.-- ஐ.நா தெரிவிப்பு
இலங்கை உட்பட ஏனைய பல நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் தன்னிச்சையாக நவ்று தீவு தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்திருந்ததன் மூலம் அவர்களின் மனித உரிமைகளை மீறியுள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.
நவ்றுவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருந்ததன் மூலம் ஆஸ்திரேலியா அவர்களின் மனித உரிமையை மீறியது என தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமை குழு ஏனைய நாடுகள் இந்த முறையை பின்பற்றுவது குறித்து எச்சரித்துள்ளது.
நவ்றுவில் 25 அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறித்த தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தீர்ப்புகளிலேயே ஐ.நாவின் மனித உரிமை குழு இதனை தெரிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கை குறித்து தீர்மானிக்கும் பொறுப்பை இன்னுமொரு தரப்பிடம் வழங்கும்போது அரசாங்கம் தனது மனித உரிமை கடப்பாடுகளில் இருந்து விடுபடமுடியாது என ஐ.நாவின் குழு தெரிவித்துள்ளது.
ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் அறிமுகப்படுத்திய மிகவும் கடுமையான கொள்கையின் மூலம் ஆஸ்திரேலியா படகுகள் மூலம் தனது நாட்டை வந்தடைய முயன்றவர்களை பப்புவா நியுகினியின் மனஸ்தீவு மற்றும் நவ்று தீவு ஆகியவற்றில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 சுயாதீன நிபுணர்கள் அடங்கிய ஐ.நா குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
ஆஸ்திரேலியா சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் தங்கள் உரிமைகளை மீறிவிட்டது.
குறிப்பாக தடுத்து வைத்திருந்ததன் மூலம் என அவர்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தனர்.