இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகு தொழில் நடவடிக்கையைத் நிறுத்துமாறு கோரி 27 ஆம் திகதி யாழ். நகரில் போராட்டம்

இந்திய மீன்பிடியாளர்களின் சட்டவிரோத இழுவைப் படகு தொழில் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ். நகரில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தீவகக் கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த மேற்படி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மேலும் கூறுகையில்,
"இந்திய மீனவரின் சட்டவிரோத இழுவைமடித் தொழில் நடவடிக்கையானது வடக்கில் குறிப்பாக எமது தீவக பிரதேசத்தைக் கடுமையாகப் பாதித்து வருகின்றது.
இதை நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள், கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில்,எமது வாழ்வுரிமைக்கான பொருளாதார ஈட்டலை உறுதி செய்ய நாம் வீதியில் இறங்கி போராடத் தீர்மானித்துள்ளோம்.
அதனடிப்படையில் தீவகக் கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
அதனடிப்படையில் எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் எமது இந்தப் போரட்டம் யாழ். பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பித்து ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் செல்லவுள்ளது.
அத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் வழங்கவுள்ளோம்.
எமது இந்தப் போராட்டத்துக்கு யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தை வலுவூட்டுமாறு அழைப்பு விடுகின்றோம்.
குறித்த போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை வழங்க 077 199 4097 அல்லது 077 563 4883 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கோருகின்றோம்." - என்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
