கொழும்பில் புதிய முனையம் அமைத்து வரும் அதானி நிறுவனத்துக்கு அமெரிக்க நிதியுதவி தேவையில்லை என அதானி நிறுவனம் தெரிவிப்பு

4 weeks ago



இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் புதிய முனையம் அமைத்து வரும் அதானி நிறுவனத்துக்கு அமெரிக்க நிறுவனம் நிதி உதவி அளிக்க ஒப்புக்கொண்டிருந்த நிலையில் அந்த நிதியுதவி தேவையில்லை என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைகத்தில், கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் (CWIT) எனப்படும் ஆழ்கடல் கொள்கலன் முனையத்தின் வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் இயக்கத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதானி போர்ட்ஸ், இலங்கை கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) ஆகியவற்றின் கூட்டமைப்பினால் CWIT உருவாக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்கு அமெரிக்காவின் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (US IDFC) 553 மில்லியன் டொலர் கடன் உதவி வழங்க கடந்த ஆண்டு நவம்பரில் ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், அமெரிக்க நிறுவனத்துடனான கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் வெளியேறியுள்ளது.

 “இந்தத் திட்டத்துக்கு நிறுவனத்தின் உள் நிதி திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மைத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படும்.

இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனிடமிருந்து நிதியுதவிக்கான எங்கள் கோரிக்கையை நாங்கள் திரும்பப் பெற்றுள்ளோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானிக்கும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் இடையிலான ஒப்பந்தம் அவர்களின் நிபந்தனைகளுக்கு இணங்க மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் கேட்டுக் கொண்டதையடுத்து அதானி குழுமம் இந்த முடிவை எடுத்துள்ளது.

திட்டம் முடிவடையும் தருவாயில் உள்ளதால் 51 சதவீத பங்கை வைத்திருக்கும் அதானி போர்ட்ஸ், US IDFC-ன் நிதியுதவியின்றி திட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம், அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் நிறுவனர் தலைவர் கவுதம் அதானி மற்றும் ஏழு பேர் மீது, இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டொலர்கள் லஞ்சமாக கொடுக்க சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆதாரமற்றது என்று மறுத்துள்ளது.

மேலும், சட்டப்படி இந்த விவகாரம் கையாளப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க நிறுவனத்தின் நிதி உதவியை ஏற்க அதானி போர்ட் நிறுவனம் மறுத்துள்ளது.

அண்மைய பதிவுகள்