வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவரின் சொகுசு காரை மோசடியான முறையில் உரிமம் மாற்றம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பெயரில் சொகுசு கார் ஒன்றை கொள்வனவு செய்து அதற்கு சாரதி ஒருவரையும் நியமித்துள்ளார்.
தற்போது அவர் வெளி நாட்டில் வசித்து வரும் நிலை யில் வாகனத்துக்கு இந்த ஆண்டுக்கான வரி அனுமதிப் பத்திரம், புகை பரிசோதனை செய்வதற்கு வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை எனக் கூறி வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணிடம் அவற்றை பெற்றுள்ளார்.
வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு காரை தனது பெயருக்கு மாற்றம் செய்ய முயற்சித்துள்ளார். இந்த விடயம் வாகன உரிமையாளருக்கு தெரிய வந்ததை அடுத்து, அவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கார் சாரதியை கைது செய்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
நீதிமன்ற விசாரணைகளில் சந்தேகநபர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று, வாகன பதிவு புத்தகம் உள்ளிட்ட வாகனம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் உரிமையாளரான பெண்ணிடம் மீள ஒப்படைக்க உத்தரவிட்டது.