வவுனியாவில் 12 வயது மாணவன் ஜஸ் போதை நுகர்ந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்ப்பு.

4 months ago


வவுனியா நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப்பொருள் நுகர்ந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், மாணவனின் உடல் நிலை தற்போது தேறி வருவதாக பொலிஸார் நேற்று (20) தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 7 இல் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் பாடசாலைக்கு முன்பாகவுள்ள கடை ஒன்றின் அருகில் இருந்த ஒதுக்கு புறமான இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் பாடசாலைக்குள் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் குறித்த மாணவன் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தமையால் பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்கள் ஊடாக வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு, வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட மாணவன் தற்போது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவன் ஐஸ் போதைப் பொருளை பாவித்ததன் காரணமாக இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.