புதுச்சேரியில் ஃபெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்தனர்.ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவிப்பு
தமிழ்நாடு புதுச்சேரியில் ஃபெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்தனர் என ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார்.
ஃபெங்கல் புயலைத் தொடர்ந்து புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் மக்கள் முடங்கி உள்ளனர்.
இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த மழை வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
புதுவை கோவிந்தசாலை முடக்கு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). ஆட்டோ ஒட்டுநரான இவர் வாடகை வீட்டில் அவரது தாயார் சீதா (80) வசித்து வந்தார்.
இவர் வசிக்கும் பகுதிக்கு உப்பனாறு வாய்க்காலில் இருந்து வெளியேறி வெள்ளநீர் புகுந்தது.
அவரின் வீட்டில் புகுந்த மழைநீரில் முருகேசன், சீதா ஆகியோர் சிக்கித் தவிப்பதாக நேற்று அதிகாலை 2 மணி அளவில் பெரியகடை பொலிஸாருக்கு தகவல் வந்தது.
உடனே அங்கு விரைந்து சென்ற பொலிஸார் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு அவர்களை பரிசோதித்த போது முருகேசன் வரும் வழியிலேயே உயிரிழந்தார் என தெரியவந்தது.
சீதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் ஒதியஞ்சாலை பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வசித்த 50 வயது மதிக்கத்தக்க நபரும், முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகர்ப் பகுதியில் 57 வயது பெண்ணும், மேட்டுப்பாளையம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க நபரும் உயிரிழந்தனர்.
அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பலியானவர்கள் யார் என பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
படங்கள்-- எம்.சாம்ராஜ் புதுச்சேரி