இலங்கையில் தற்போதுள்ள அமைதியான சூழலை குழப்பாதீர்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அமைதியான சூழலே நாட்டில் உள்ளது.வெவ்வேறு நாடுகளில் இடம்பெற்ற வன்முறை சூழல்களை எடுத்துக் கூறி இலங்கையில் தற்போதுள்ள அமைதியான சூழலை குழப்பும் நோக்கில் யாரும் செயல்படக் கூடாது என கோரிக்கை விடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியல் நலன்களை அடையவும் மக்கள் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கிலும் சிலர் அநாவசியமான பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் புதன்கிழமையுடன் வேட்பா ளர்களின் பிரசார கூட்டங்கள் நிறைவு பெறுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதித் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் சிறீ ரத்நாயக்க தெரிவிக்கையில்-
2024 ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்பு கடைமைகளுக்காக சுமார் 70 ஆயிரம் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத்தை நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தாவிடினும் வழமை போல நாடளாவிய ரீதியில் இராணுவத்தினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அமைதியானதும் சுதந்திரமானதுமான வாக்களிப்புக்கான சூழல் நாட்டில் உள்ளது. எனவே, ஊரடங்கு சட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என்றே கருதுகின்றோம்.
ஊடகங்களிலும் சமூக ஊடங்களிலுமே வன்முறைக்கான சூழல் தூண்டப்படுகின்றது. அவற்றை கண்காணித்து வருகின் றோம். இல்லாத விடயத்தை ஏன் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்று தெரியவில்லை.
வன்முறைகளை உருவாக்க வேண்டாம் என்றே அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.
பொது மக்களுக்கு தேர்தல் குறித்தும் தேசிய அரசியல் மற்றும் வாக்களிப்பு தொடர்பிலும் போதிய அறிவாற்றல் உள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் சனிக்கிழமை மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று ஜனாதிபதி தெரிவுக்கான தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவார்கள்.அத்தகைய அமைதியான சூழலே நாட்டில் உள்ளது.
வெவ்வேறு நாடுகளில் இடம்பெற்ற வன்முறைச் சூழல்களை எடுத்துக் காட்டி இலங்கையில் தற்போதுள்ள அமைதியான சூழலை குழப்பும் நோக்கில் சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அரசியல் நலன்களை அடையவும் மக்கள் சொத்துகளைக் கொள்ளையடிக்கும் நோக்கிலுமே இவ்வாறான கருத்துக்களை பரப்புவர்களின் நோக்கமாக உள்ளது-என்றார்.