சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமை தனது அத்திபாரத்துக்கே வேட்டு வைக்கும் செயல் என்று என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சியை முன்வைத்துள்ள சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் அரசுக் கட்சி கோரியுள்ளமை தனது அத்திபாரத்துக்கே வேட்டு வைக்கும் செயல் என்று தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறினார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர். "தமிழினத்துக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்த் தேசிய கட்டமைப்பாக நாம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அரியநேத்திரனை களமிறக்கியுள்ளோம்.
"தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்கிரம சிங்க, சஜித் பிரேமதாஸ், அநுர குமார திஸநாயக்க, நாமல் ராஜபக்ஷ ஆகிய நால்வரும் ஒற்றையாட்சி சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு அதன் வழி நடப்பவர்கள்.
"சஜித் பிரேமதாஸ ஒற்றையாட்சிக்கு வெளியே சென்று தீர்வு காணுவதாக மூச்சுக்கூட விடவில்லை. 13ஆம் திருத்தத்தைப் பற்றி பேசி இருக்கிறார். புதிய அரசியல் யாப்பை ஏற்படுத்தும் வரையில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப் படுத்த உள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால், இணைப்பாட்சி பற்றியோ ஒற்றையாட்சி பற்றியோ எங்கேயும் குறிப்பிடவில்லை.
"இந்த நிலையில்தான் தமிழ் அரசு கட்சியினர் அவசரமாகக் கூடி சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். இதன்மூலம், தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு எதனை சொல்கிறார்கள் என்பதனைத் தான் நாங்கள் கேட்கிறோம்.
"இதுவரை காலமும் ஒற்றையாட் சிக்குள் இருந்து எம்மை விடுவிக்க வேண்டும் என நாம் தொடர்ந்து அரசியல் ரீதியாக போராடி வரும் நிலையில், ஒற்றையாட்சியின் வழி நடக்கும் சஜித் பிரேமதாஸவை ஆதரித்துள்ளார்கள். இவர்களின் நோக்கம் என்ன? ஆகவே, மக்கள் தமிழ் அரசுக் கட்சியின் நோக்கத் தைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்- என்றார்.