தமிழினப் படுகொலைக்கு தொடர்புடையவர்கள் பொறுப்புக் கூறலுக்கு உட்பட வேண்டும். பியெர் பொய்லிவ்ர் தெரிவிப்பு
கனடாவில் இம்மாதம் தமிழர் மரபுரிமை மாதமாகக் கொண்டாடப்படுகின்ற போதிலும், அதற்குரிய முழுமையான கௌரவம் இன்னமும் அடையப்படவில்லை.
ஏனெனில் மிகமோசமான தமிழினப் படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள்.
எனவே அக்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை நாம் தொடர்ந்து உறுதியாக வலியுறுத்துவோம் என கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ்ர் தெரிவித்துள்ளார்.
தமிழர் மரபுரிமை மாதத்தை முன்னிறுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் அவர், இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது:
நாம் ஜனவரி மாதம் முழுவதும் கடும் உழைப்பாளிகளைக் கொண்டாடுகின்றோம்.
கனடாவில் வாழும் தமிழர்கள் அவர்களது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருக்கும் அதேவேளை, பல தசாப்தகாலமாக எமது சமூகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர்.
தமிழர்களின் இப்பாரம்பரிய வரலாறு பல ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாகும்.
அவர்களது பாரம்பரிய கலாசாரமானது மொழி, இசை, கலை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் என்பவற்றின் ஊடாக வெளிப்படுகின்றது.
பாரம்பரிய நம்பிக்கைகள், குடும்பம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் ஊடாக வழிநடத்தப்படும் கனேடியத் தமிழர்களால் இங்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் வணிக நிலையங்கள், கலாசார அமைப்புக்கள் மற்றும் சமூக ஊடக நிலையங்கள் என்பன கனேடிய சமூகத்தையும், பொருளாதாரத்தையும் சீரமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன.
இருப்பினும் நாம் கொண்டாடும் இந்த தமிழ் மரபுரிமை மாதம் துரதிஷ்டவசமாக அதற்குரிய முழுமையான கௌரவத்தை இன்னமும் பெற்றுக் கொள்ளவில்லை.
அதேவேளை மிகமோசமான தமிழினப் படுகொலையினால் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள்.
எனவே கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சியினரான நாம் இந்த தமிழர் மரபுரிமை மாதத்திலும், இவ்வாண்டு முழுவதும் மேற்குறிப்பிட்டவாறான மிகமோசமான குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை உறுதியாக வலியுறுத்துவோம்.
அதேவேளை கனடாவில் வாழும் தமிழ்ச்சமூகத்தினரைக் கொண்டாடுவதில் நாம் பெருமையடைகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.