யாழில் காணிகளை சிங்கள மக்கள் கேட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை நாங்களும் கேட்போம், அரசு பெற்றுத்தருமா? எம்.பி சி.சிறீதரன் கேள்வி
யாழ்ப்பாணத்தில் காணி இருந்ததாக சிங்கள மக்கள் கேட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை நாங்களும் கேட்போம், காணிகளுக்கு ஆவணங்களும் உள்ளன, அரசாங்கம் பெற்றுத்தருமா? என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமக்கு யாழ்ப்பாணத்தில் காணி இருந்ததாகவும் அவற்றை பெற்றுத் தருமாறும் கேட்டு தென்பகுதியில் இருந்து கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
கொழும்பு, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு மற்றும் முல்லைத்தீவு - வவுனியா மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
இந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் வேறு இடங்களில் இப்போதும் வாழ்கிறார்கள்.
தங்கள் காணிகளுக்கான ஆவணங்களையும் பலர் வைத்திருக்கிறார்கள்.
எந்த ஆவணங்களும் இல்லாமல், யாழ்ப்பாண த்தில் காணி இருந்தது என கூறிக்கொண்டு யாரும் வரமுடியாது.
அப்படி நடந்தால் அதை திட்டமிட்ட குடியேற்றமாகவே பார்க்க முடியும்,
அதற்கு சிறந்த உதாரணம் நாவற்குழி சிங்கள குடியேற்றம். அங்கிருப்பவர்கள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இரவோடு இரவாக வந்து இறங்கினார்கள். பின்னர் தாங்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததாக கூறினார்கள்.
அரசாங்கம் அவர்களை திட்டமிட்டு யாழ்ப்பாணத்தில் குடியேற்றியது. அவர்களிடம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தமைக்கான அத்தாட்சிகள் எவையும் இல்லை.
அப்படியே மீண்டும் ஒரு குடியேற்றத்திற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதை நாங்கள் அறியக்கூடியதாக உள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் ராஹா ஈன்ஷடீன் என்பவர் லண்டன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கொழும்பில் தமிழர்கள் வாழ்கி றார்கள் தானே? என கூறுகிறார்.
அவர் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும். வரலாறு தெரியாமல் பிதற்றக்கூடாது.
இன்றைய அனுராதபுரம் ஒரு தமிழ் மாவட்டம், அனுராதபுரத்தில் முதல் நகரபிதா ஒரு தமிழர், 40ற்கும் மேற்பட்ட சைவக் கோவில்கள் அங்கே உள்ளன, விவேகானந்தா கல்லூரி என்ற தமிழ் பாடசாலை இப்போதும் இருக்கிறது.
ஆகவே வரலாறு தெரியாமல் பிதற்றக்கூடாது.
இந்த அரசாங்கம்தான் மாற்றத்தை கொண்டுவரும் என ஒருபகுதி தமிழ் மக்கள் விரும்பினார்கள்.
அவர்கள் தங்களுடைய மோசமான விருப்பத்தின் அறுவடையை அனுபவிக்க வேண்டிய காலம் வருகிறது என்றார்.