அம்பாறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் முற்றாக மூழ்கியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் அம்பாறை மாவட்டத்தின் இங்கினியாகலை பிரதேசத்தில் 240.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அதிகப் படியாக பதிவாகியுள்ளது.
மகாஓயா பிரதேசத்தில் 132.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட வானிலை அவதானிப்பாளர் எம்.ஏ.எம்.அக்மல் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக இம்மாவட்டத்தில் பிரதான வீதிகள் சில மழை நீரால் நிரம்பியுள்ளது.
பாலம் உடைப்பெடுத்தமையாலும் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நிந்தவூர் மாட்டுப்பளை பகுதியில் பாலமொன்று உடைப்பெடுத்த மையால் கல்முனை- அக்கரைப்பற்று போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை-கண்டி வீதி. அம்பாறை- கல்முனை பிரதான வீதிகளின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
இம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளன.
தாழ்நிலப் பிரதேசத்தில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
உறவினர்கள் இல்லங்களுக்கும், பாடசாலைகள். மத நிறுவனங்கள் போன்றவற்றில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் 34 ஆயிரத்து 885 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 23 மூவாயிரத்து 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
52 நலன்புரி நிலையங்களில் 2082 குடும்பங்களைச் சேர்ந்த 6710 பேர் தங்கவைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை இம்மாவட்டத்தில் 70 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.
அதிக மழை வீழ்ச்சி காரணமாக இந்த மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட ஆயிரக் கணக்கான விவசாயச் செய்கைகள் பாதிப்படைந்துள்ளன.
இம்மாவட்டத்தின் நெற் செய்கை மற்றும் உப உணவுப் பயிர்ச் செய்கை போன்றவற்றுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை, கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் தமது மீன்பிடி படகுகள் வள்ளங்கள் போன்றவற்றை கடற்கரையிலிருந்து வெகு தொலைவுக்கு அப்புறப்படுத்தி கரையொதுக்கி வைத்துள்ளனர்.
இதற்கென மீனவர்கள் கனரக இயந்திரங்களின் உதவியுடன் கடற்றொழில் உபகரணங்கள் கரையொதுக்கப்பட்டு வருகின்றன.
கடல் அலைகளின் வீரியம் இம்மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுவதால் சில பிரதேசங்களில் கடல் நீர் கரைப் பகுதிகளுக்கு ஊடுருவியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் முதலைகள், பாம்புகள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் விஷ ஜந்துக்கள் போன்றன மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்தமையால் மக்கள் அச்ச நிலையை அடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் வெள்ள நிலைமைகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட அரச அதிபர் சிந்தக அபேவிக்ரம உள்ளிட்ட மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள். முப்படையினர், துறைசார் முக்கியஸ்தர்கள் பொது அமைப்பைச் சேர்ந்தவர்கள், நலன்விரும்பிகள். பொதுமக்கள் போன்றோர் மக்கள் நல சேவையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் மேலும் தெரிவித்தார்.