தாய் மற்றும் இரு குழந்தைகள் உட்பட 4 பணயக் கைதிகளின் சடலங்களை ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிடம் ஒப்படைத்தது

தாய் மற்றும் இரு குழந்தைகள் உட்பட நான்கு பணயக் கைதிகளின் சடலங்களை ஹமாஸ் அமைப்பு நேற்று (20) செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக இஸ்ரேலிடம் ஒப்படைத்தது.
கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி கடத்தப்பட்ட பணயக் கைதிகளில் இளம் வயதான ஆறு மாத குழந்தை மற்றும் அதன் நான்கு வயது சகோதரன் மற்றும் அவர்களின் 34 வயது தாயான ஷிரில் பிபாஸ் ஆகியோருடன் 84 வயதான ஒடெட் வலிப்சிட்ஸ் ஆகியோரின் சடலங்கள் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் நேற்று கையளிக்கப்பட்டன.
ஹமாஸ் போராளிகள் மற்றும் மற்ற ஆயுதம் ஏந்திய போராளிகள் வரிசையில் நிற்கும் நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில் நான்கு சவப்பெட்டிகளும் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் அவை இஸ்ரேலுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
‘வேதனையை வார்த்தைகளால் கூறமுடியவில்லை. முழு தேசத்தின் இதயமும் சிதைந்துள்ளது’ என்று இஸ்ரேல் ஜனாதிபதி இசாக் ஹர்சோக் தெரிவித்துள்ளார்.
‘இஸ்ரேலிய தேசத்தின் சார்பில் சிரம் தாழ்த்தி மன்னிப்புக் கோருகிறேன்.
அந்த பயங்கர நாளில் உங்களை பாதுகாக்க முடியாததை இட்டு மன்னிப்புக் கேட்கிறேன்.
உங்களை பாதுகாப்பாக மீட்க முடியாததையிட்டு மன்னிப்புக் கேட்கிறேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின் போதே காசாவுக்கு அருகில் உள்ள கிப்புட்ஸ் நிர் ஓஸ் பகுதியில் இருந்து குறித்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அவர்களின் தந்தையான யார்தானுவுடன் கடத்தப்பட்டனர்.
எனினும் கடந்த 2023 நவம்பரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இந்த இரு குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குறிப்பிட்டது.
இதனை இஸ்ரேல் கடைசி நிமிடம் வரை உறுதி செய்யத் தவறியதோடு அவர்கள் மரணித்திருப்பதை ஏற்க மறுத்து வந்தது.
இந்த குழந்தைகளின் தந்தையான யார்தான் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் முன்னதாக ஹமாஸ் அமைப்பால் விடுவிக்கப்பட்டார்.
எனினும் தாய் மற்றும் குழந்தைகளுக்கு என்ன ஆனது என்பது கடைசி நிமிடம் வரை தெரியாமல் இருந்ததாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மற்ற சடலமான வலிப்சிட்ஸ், ஒக்டோபர் 7 இல் கொல்லப்பட்ட அமைதி செயற்பாட்டாளராவார்.
காசாவில் போர் வெடிக்கக் காரணமான 2023 ஒக்டோபர் 7 தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது பாதுகாப்பு நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனம் இருப்பதோடு பணயக் கைதிகளை மீட்பதில் போதுமாக செயற்படவில்லை என்றும் அவர் மீது இஸ்ரேலில் கடும் விமர்சனம் உள்ளது.
கடந்த ஜனவரி 29 ஆம் திகதி அமுலுக்கு வந்த காசா போர் நிறுத்தத்தில் பயணக் கைதிகளின் சடலங்களை ஹமாஸ் கையளித்திருப்பது இது முதல் முறையாகும்.
இதுவரை 19 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்திருப்பதோடு ஐந்து தாய்லாந்து நாட்டவர்களும் திட்டமிடப்படாத வகையில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு பகரமாக ஆயிரத்திற்கு அதிகமாக பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.
போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதும் இஸ்ரேல் அடிக்கடி அதனை மீறி வருவதோடு காசாவின் தெற்கு நகரான ரபாவில் கடந்த புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும்; பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.
காசாவில் 15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வந்த தாக்குதல்களில் 48,291 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆறு வாரங்கள் கொண்ட முதல் கட்ட காசா போர் நிறுத்த உடன்படிக்கை எதிர்வரும் மார்ச் ஆரம்பத்தில் முடிவடையவுள்ள நிலையில் இரண்டாம் கட்டத்திற்கான பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.
இரண்டாம் கட்டத்தில் எஞ்சியுள்ள சுமார் 60 பணயக்கைதிகளை விடுவிப்பது (இவர்களில் பாதி அளவானோர் மரணித்திருப்பதாக நம்பப்படுகிறது) மற்றும் இஸ்ரேலிய துருப்புகள் காசாவில் இருந்து வாபஸ் பெற்று போரை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த சில நாட்களில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் காசாவில் உள்ள இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்களை வெளியேற்றி அந்தப் பகுதியை கைப்பற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருக்கும் சர்ச்சைக்குரிய கருத்து போர் நிறுத்தத்தை மேலும் பலவீனப்படுத்துவதாக மாறியுள்ளது.
இந்தத் திட்டத்தை இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என்று பரவலாக விமர்சிக்கப்படுவதோடு உலக நாடுகள் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் ட்ரம்பின் இந்த திட்டத்திற்கு பதில் அளிக்கும் முயற்சியாக அரபுத் தலைவர்கள் இன்று (21) சவூதி அரேபியாவில் கூடவுள்ளனர்.
இந்தத் திட்டத்திற்கு ஏற்கனவே பிராந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் தமக்கிடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவே இன்றை மாநாடு பார்க்கப்படுகிறது.
ட்ரம்பின் திட்டத்திற்கு எதிராக காசாவை மீளக்கட்டியெழுப்பும் திட்டம் குறித்து அரபுத் தலைவர்கள் இதன்போது ஆலோசிக்கவுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
