ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பகட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பகட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தேர்தலுக்கான திகதி இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிவிக்கப்படும். அரசமைப்பு ஏற்பாடுகள், ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம் - இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த காலங்களை விட மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே, சுதந்திரமான - நீதியான தேர்தலை நடத்த சகல தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் கோரினார். தேர்தல்கள் ஆணைக் குழுவின் பணிமனையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
ஜனாதிபதித் தேர்தல் குறித்து எழுப்பப்படும் மாறுப்பட்ட கருத்துகள் குறித்து மக்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. அரசமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய எதிர்வரும் செப்ரெம்பர் 17 முதல் ஒக்ரோபர் மாதம் 16 ஆம் திகதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்கெடுப்பு திகதி, வேட்பு மனுக்களை கையேற்கும் திகதி, தேர்தல் அறிவித்தலை பிரகடனப்படுத்தும் திகதி ஆகியவற்றை தீர்மானிக்கும்போது பல விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். வேட்பாளர்களின் பிரசார நடவ டிக்கைகளுக்கு போதுமான கால அவகாசம் வழங்குதல், வாக்கெடுப்புடன் தொடர்புடைய சட்டரீதியிலான கடமைகளுக்கு போதுமான கால அவகாசம் வழங்குவதை போன்று அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு பொருத்தமான சூழலை கொண்ட ஒரு தினத்தை தீர்மானித்தல் குறித்து கவனத்தில் கொள்ளப்படும்.
ஏதேனும், காரணத்தால் வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் வாக்கெடுப்பை இரத்துச் செய்ய நேரிட்டால் ஒக்ரோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் வாக்கெடுப்பை நடத்த குறைந்தபட்சம் 14 நாட்கள் தேவைப்படும்.
வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் காலப் பகுதி காலை 09 மணிமுதல் 11 மணிவரை என்று இரண்டு மணித்தியாலங்கள் வரையறுக்கப்பட்டிருப்பதால் பெயர் குறித்த வேட்பு மனுக்களை கையேற்கும் போது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் மத, சம்பிரதா யங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொது காரணிகள், அரசமைப்பு ஏற்பாடுகள், ஜனாதிபதித் தேர்தல் சட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வாக்கெடுப்பு திகதியை இந்த மாதத்தின் இறுதியில் அறிவிக்க முடியும். ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஜூலை 17 ஆம் திகதி (இன்று) கிடைக்கப்பெறும் நிலையில் வாக்கெடுப்பு திகதியை ஆணைக்குழு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று. ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
அரசமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தை ஆராயும்போது நடைமுறை தன்மையை விளங்கிக்கொள்ள முடியும். இந்த மாத இறுதியில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டவுடன் அன்றிலிருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் வேட்புமனு தாக்கலை பொறுப்பேற்கும் திகதியை அறிவிக்க வேண்டும். வேட்பு மனுக்களை பொறுப்பேற்ற திகதியிலிருந்து 4 முதல் 6 வாரங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு திகதியை அறிவிக்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்ப தற்கு ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் பணிகளுக்காக ஆரம்ப கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் செலவுகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் இலங்கை அரசியலுக்கு புதிய அத்தியாயமாகும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமையால் இந்த சட்டத்தை செயல்படுத்த முடிய வில்லை. ஜனாதிபதித் தேர்தலில் இந்த சட்டத்தை அமுல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டு அதற்கு தேவையான பொறி முறை வகுக்கப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சுகள் நடைபெறுகின்றன. கடந்த தேர்தல்க ளின்போது மேற்கொள்ளப்பட்ட விதத்தில் தேர்தல் பிணக்குகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன- என்றார்.