தூய்மையான இலங்கை' வடக்குக்கான அறிமுக நிகழ்வு திங்கட்கிழமை (03) யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட திருநகரில் முன்னெடுப்பு

2 months ago


ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் 'தூய்மையான இலங்கை' செயற்றிட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை (03) யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட திருநகர் வட்டாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் மேலும் தெரிவிக்கையில்,

பசுமையான - அழகான சுத்தமான நகரமாக யாழ்ப்பாணம் நகரத்தை மாற்றும் இலக்கோடு யாழ். மாநகர சபை பல நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

அதற்காக சில வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

திண்மகக் கழிவகற்றல் மேம்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன் கண்காணிப்புப் பொறிமுறையும் இறுக்கமாக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அதனை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டத்தை சமாந்திரமாக முன்னெடுத்துள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு குடியிருப்புக்களும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பான அறிவுறுத்தலுடன் அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் வீடுகளில் சேரும் குப்பைகளை வாரத்துக்கு இரு தடவைகள் ஒவ்வொரு வீடு வீடாகப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு குப்பைகளை வழங்க முடியாதவர்களுக்காக யாழ். மாநகர எல்லைக்குள் 9 பிரட்டு மையங்கள் (குப்பை சேகரிக்கும் நிலையங்கள்) காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் செயற்பட்டு வருகின்றன.

கழிவகற்றல் செயன்முறைக்காக தனியார் உழவியந்திரங்களும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளன.

இதேவேளை யாழ். நகரப் பகுதி வர்த்தகர்களிடமிருந்து ஒரு நாளில் இரு தடவைகள் குப்பைகளைச் சேகரிக்கும் பொறிமுறையும் திங்கட்கிழமை (03) ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆரோக்கியமான, உளநலன் விருத்திக்காக யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் ஓய்வு நிலையங்கள், பூங்காக்களின் செயற்றிறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆரோக்கிய உணவகங்களை திறப்பதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு விளக்கமளித்த யாழ்ப்பாணப் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பொ.ஸ்ரீவர்ணன் கருத்த தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றங்கள் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன என்றும் அவற்றை தற்போது விரைவுபடுத்தியுள்ளன.

வறுமை ஒழிப்பு உட்பட்ட தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் பல்வேறு கருத்திட்டங்கள் உள்ளூராட்சி மன்றங்களால் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் மக்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் ஒத்துழைப்புடன் அதனையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுஇடங்களை தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த பங்குதாரர்களான மக்கள், வர்த்தகர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும்.

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் திங்கட்கிழமை (03) தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் அங்குரார்பணம் இடம்பெறவுள்ளது.

மேலும் உள்ளூராட்சி மன்றங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல செயற்பாடுகளின் மாற்றங்களை மக்கள் எதிர்காலத்தில் உணரக் கூடியதாக இருக்கும் என்றார்.

இந்த நிகழ்வில் நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலர் ஆர்.குருபரன், யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் - யாழ்ப்பாணம் பொ.ஸ்ரீவர்ணன், வடக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ப.பார்த்தீபன் ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றனர்.

அண்மைய பதிவுகள்