மட்டக்களப்பில் நீர் நிலைகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று மக்கள் அச்சம் தெரிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை ஓய்ந்திருக்கின்ற நிலையில் கிராமியக் குளங்கள் மற்றும் ஆறுகளிலும் நீர் நிரம்பியுள்ளன.
இந்த நிலையில் குறித்த நீர் நிலைகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப் பரப்புக்கு உட்பட்ட போரதீவு பற்றுப் பிரதேசத்துக்கு உட்பட்ட வெல்லாவெளிக் குளத்தில் முதலைகள் அதிகம் நடமாடுகின்றன என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் குளத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அக் குளத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளும் மீன் பிடியில் ஈடுபடுபவர்களும், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
போரதீவுப் பற்றுப் பிரதேச செயலகத்தின் முன்னால் அமைந்துள்ள வெல்லாவெளி குளத்தில் மாத்திரம் சுமார் 07 இற்கு மேற்பட்ட முதலைகள் காணப்படுகின்றன என்று பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் மட்டக்களப்பு வாவியிலிருந்து இவ்வாறு குளத்துக்கு முதலைகள் வந்திருக்கலாம் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குளம் மக்கள் குடியிருப்புக்கு அண்மித்துள்ளதால் பொது மக்களும், இரவு வேளைகளில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் உள்ள வாவியில் புளியந்தீவு பகுதியில் சஞ்சரித்து வாவியோரங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் ஆடு, மாடு போன்ற பெறுமதிமிக்க கால்நடைகளை வேட்டையாடி வந்த சுமார் 20 அடி நீளமுள்ள இராட்சத முதலை ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்து வன ஜீவரா ஜிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.