இறுதிப் போரில் நின்ற இராணுவத்தளபதி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை அழைத்து வாருங்கள் பதில் சொல்கிறோம் என பருத்தித்துறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரியிடம் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவிப்பு.

4 months ago


காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர் பான விசாரணை ஏமாற்று நாடகம். காணாமல் ஆக்கப்பட்டமைக்கு இறுதி யுத்தக் களத்தில் இருந்த படைத்தளபதி, இராணுவத்தளபதி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரே சாட்சி. அவர்களை அழைத்து வாருங்கள் பதில் சொல்கிறோம் என பருத்தித்துறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரியிடம் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித் துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விசாரணையில் பங்கேற்றிருந்த நாகராசா வர்ணகுலசிங்கம் என்ற மேற்படி நபர் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-

"இறுதி யுத்தம் இடம்பெற்றபோது 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி எனது மகள் யுத்த பிரதேசத்தில் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையம் உட்பட பல்வேறு இடங்களிலும் பல தரப்புகளிட மும் தேவையான ஆவணங்களுடன் முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளோம். எல்லா இடங்களிலும் ஆவணங்கள் வாங்கப்பட்டதுடன் விசாரணைகள் என்ற போர்வையில் அலைக்கழிக்கப்பட்டுள்ளோம்.

யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் முடிந்த நிலையில் விசாரணைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறதே தவிர எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவ் வாறான நிலையில் திரும்பவும் சாட்சியங்களைக் கேட்டார்கள். அவ்வாறு கேட்ட அதிகாரியிடம், “நீங்கள் 'சாட்சி யார்?' எனக் கேட்கிறீர்கள். யுத்தம் நடைபெற்ற போது அங்க இருந்த படைத்தளபதி யாரோ அவர்தான் காணாமல் ஆக்கப்பட்ட எங்கட பிள்ளைகளுக்கு சாட்சி. அவர்தான் பதில் சொல்லவேண்டும். அப்படி இல்லாவிடில் பாதுகாப்பு அமைச் சரோ இராணுவத் தளபதியோதான் பதில் தரவேண்டும். இந்த மூவரையும் வைத்துக் கொண்டு விசாரணை நடத்தும் பட்சத்தில் நாம் பதிலைத் தருகின்றோம்" என்று தெரிவித்துள்ளேன். யாரைக் கேட்கவேண்டுமோ அவர்களை விட்டு விட்டு சாட்சியத்தை கொண்டுவா என்றும் எப்படி காணாமல் ஆக்கப்பட்டனர்? எனவும் எங்களைக் கேட்கின்றனர். எங்களின் பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கிய படைத் தளபதியும் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சரும் தான் சாட்சி. அவர்கள் மூவரும் தான் பதில் சொல்லியாக வேண்டும்.

ஒவ்வொரு போகத்துக்கும் ஆட்சி மாறிவருகின்றது. இதுக்கெல்லாம் காரணமானவர்கள் ஆட்சியை விட்டிட்டு ஓடிவிட்டனர். இன்று அந்தக் குடும்பத்திலிருந்து ஒருவர் தேர்தலில் போட்டியிடுகின்றார். எங்களுக்கான தீர்வை எந்த ஒரு அரசாங்கமும் வழங்கப்போவதில்லை" - என்றார். 


அண்மைய பதிவுகள்