23 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்றைய தினம்(18) ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது.
இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது.
நாட்டின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து இன்றைய தினம் புதிய அமைச்சரவை அமைக்கப் படவுள்ளது.
புதிய அமைச்சரவையில், தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவே தொடர்ந்தும் செயல்படுவார்.
இதேபோன்று, விஜித ஹேரத் மீண்டும் வெளிவிவகார அமைச்சராக பதவியில் தொடர் வார்.
இதேநேரம், பாதுகாப்பு, நிதி அமைச்சுகளை ஜனாதிபதி அநுர தம் வசமே வைத்திருப்பார்.
பிரதமருக்கு மேலதிகமாக தென்மாகாணத்திலிருந்து புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மற்றுமொரு பெண் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சரவையில் இணைக்கப்படவுள்ளார்.
முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று கூறப்படுகின்றது.
இதேநேரம், தேசியப் பட்டியல் மூலம் எம். பியாகும் பிமல் ரத்நாயக்க சபாநாயகவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதேபோன்று, துணை சபாநாகராக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் அறிய வருகின்றது.
அனைத்து அமைச்சுகளுக்கும் பிரதி அமைச்சர்களும் நியமிக்கபடுவர் என்றும் அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.