யாழ்.நெடுந்தீவுக்கான படகுச் சேவை தடைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.--யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு

3 weeks ago



யாழ்.நெடுந்தீவுக்கான படகுச் சேவைகளை முன்னெடுப்பதிலுள்ள தடைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், சீறற்ற காலநிலையின் நிமித்தம் நெடுந்தீவுக்கான சேவைகளை வழங்க முடியாத சூழல் காணப்பட்டது.

இது தொடர்பில் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி சுட்டிக்காட்டினார்.

அதற்குக் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரச பையின் பணிப்பாளர் குறூஸ், நெடுந்தீவுக்கான படகுச் சேவைகளை முன்னெடுப்பதற்காக வடதாரகை. குமுதினி. நெடுந்தாரகை ஆகிய மூன்று படகுச் சேவைகள் காணப்படுகின்றன.

எனினும் நெடுந்தாரகைப் படகு எம்மிடம் கையளிக்கப்பட்டாலும் அதன் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. பாதுகாப்பு அங்கிகளும் வழங்கப்படவில்லை.

மேலும் வடதாரகை பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.

குமுதினிப் படகுச் சேவையை  மாத்திரமே நாங்கள் நடத்தி வருகின்றோம்.

குறித்த படகுச் சேவையின் நேர அட்டவணை. எத்தனை சேவைகளை நடத்தவேண்டும், எந்த நேரங்களில் நடத்தவேண்டும் என்பது பிரதேசசெயலர் மூலமே எமக்கு அறிவிக்கப்படும்.

மேலும் காலநிலையின் நிமித்தமே கடந்த காலத்தில் சம்பந்தப்பட்ட திணைக்கள அறிவுறுத்தலுடன் பிரதேச செயலருக்கு அறிவித்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

காலநிலையுடன் சவாலுக்கு உட்பட்டு எம்மால் பயண சேவையை நடத்த முடியாது.

எனவே குறித்த பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.