ஐ.நா. மற்றும் சர்வதேசத்துடனான தொடர்பை இலங்கை இழந்துள்ளது - பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு
ஐ.நா.வுக்கு சென்று பதிலளிக்க முடியாத நிலைமையில் அரசாங்கம் இருக்கின்றது என்றும், இதனால் ஐ.நா. மற்றும் சர்வதேசத்துடனான தொடர்புகளை இலங்கை இழந்துள்ளது என்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று(22) புதன்கிழமை எதிர்க்கட்சியினால் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித் துள்ளார்.
லஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில்,
சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் மட்டும் போதாது, அதனை முறையாக செயற்படுத்த வேண்டும்.
அரசாங்கத்திற்கு சார்பானவர்களுக்கு எதிராக அன்றி அரசாங்கத்திற்கு எதிரானவர்களுக்கு எதிராகவே சட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.
பாராளுமன்ற எம்.பி.யொருவர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தினார்.
அது தொடர்பில் சட்டம் செயற்படுத்தப்படவில்லை. எங்கே சட்டம்? அந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றேன்.
கொலையாளியை கண்கண்ட சாட்சி இல்லாமலேயே பிடிக்கின்ற போதும், தாக்குதல் நடத்தியவரை முழு நாடும் தொலைகாட்சியில் பார்த்தும், அதனை அவரே ஏற்றுக் கொண்ட போதும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவ்வாறான சிறிய விடயங்களுக்கே சட்டத்தை செயற்படுத்த முடியவில்லை.
அரசாங்கம் ஐ.நா.வுக்கு செல்வதனை நிறுத்திவிட்டது. பதிலளிக்க முடியாத காரணத்தினாலேயே அங்கு செல்வதை நிறுத்தியுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னரே கடைசியாக அங்கு சென்றது. அன்று இலங்கையில் பொருளாதார நெருக்கடி இடம்பெறுவதாக ஐ.நா.வில் கூறப்பட்டது.
அதற்கு பதிலளிக்க முடியாது இருந்தனர். இப்போது ஐ.நா.வை கைவிட்டே செயற்படுகின்றனர்.
சர்வதேச தொடர்புகள் இல்லை. இப்படி நாட்டை கொண்டு செல்ல முடியாது. சர்வதேச தொடர்புகள் இன்றி சர்வதேசத்திடம் கடன் கேட்க முடியுமா?
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் வாங்கல் விடயத்தில் தேர்தல் முடிவடையும் வரையில் ஜனாதிபதி கடன் மறுசீரமைப்பை செய்யப் போவதில்லை.
எந்த நாட்டிலும் இப்படி நடந்ததில்லை. பிச்சைக்காரனின் புண் போன்று இருக்கின்றது.
இப்படியிருந்தால் கடனை மீள செலுத்தத் தேவையில்லை என்று நினைக்கின்றனர். அத்துடன் யுக்திய நடவடிக்கையில் நல்ல விடயங்களும் உள்ளன.
ஆனால் கடந்த கோத்தபாய ராஜபக்க்ஷ ஆட்சி காலத்தில் பொலிஸாரின் பிடியில் இருந்த 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமையில் எப்படி இவர்களால் சர்வதேசத்திற்கு பதிலளிக்க முடியும்.
சூம் தொழில்நுட்பம் ஊடாகவே ஐ.நா.வுடன் கதைக்கின்றனர். எந்தவொரு அமைச்சரும் அண்மையில் அங்கு செல்லவில்லை.
செல்ல முடியாத நிலைமையில் இருக்கின்றனர். நாட்டை சீரழித்துவிட்டு தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்கின்றனர்.
எந்தத் தேர்தலை நடத்துவது என்றும் தீர்மானிக்க முடியாது இருக்கின்றனர். நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்களுக்கு சர்வதேசம் ஆதரவும் வழங்காது என்றார்.