இலங்கையை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிலர் ஜெனிவா செல்லவுள்ளனர்.
இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மீண்டும் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைவை ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புடன் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.
எனவே, அதற்கான ஆதரவைக் கோரி உறுப்பு நாடுகளுடன் பேச்சுகளை முன்னெடுப்பதற்காக இலங்கையை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிலர் இந்த வாரம் ஜெனிவா செல்லவுள்ளனர்.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
கூட்டத்தின் முதல் நாளிலேயே இலங்கை தொடர்பில் விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட51/1 தீர்மானத்தை காலநீடிப்பு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதேநேரம், அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான அரசாங்கம் புதிதாக நாட்டை பொறுப்பேற்றுள்ள நிலையில் 51/1 தீர்மான வரைவில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வரைவு அரசாங்கத்துக்கு அனுப்பப்படும்.
அரசாங்கத்தின் முடிவையடுத்து வாக்கெடுப்பை நடத்துவதா அல்லது இல்லையா என்பது தீர்மானமாகும்.
இலங்கை தொடர்பான பிரேரணையை அரசாங்கம் ஏற்கமறுக்கும் சாத்தியமே அதிகம் என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்படவே அதிக வாய்ப்புள்ளது.
இதனால், உறுப்பு நாடுகளின் ஆதரவைக் கோரி பேச்சுகளை முன்னெடுக்க சிவில் சமூக அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஜெனிவா பயணமாகவுள்ளனர்.