இலங்கையில் சீரற்ற காலநிலையால் 16 பேர் உயிரிழந்தனர்.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 24 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்ததாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஓர் இலட்சத்து 38 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 65 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 19 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, 98 வீடுகள் முழுமையாகவும் 2,333 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
நாடளாவிய ரீதியில் 245 இடைத் தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 8 ஆயிரத்து 984 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 596 பேர் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.