ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் உதவிச் செயலாளர் அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு சீர்திருத்தம், மற்றும் தேர்தல் முறைமை என்பன தொடர்பில் இதன் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
"பல் பரிமாண அபாய சூழ்நிலைகளைப் புரிந்து கொள்வது மற்றும் இலங்கை மக்கள் மீதான அவற்றின் தாக்கம்" என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஆதரவை வழங்கும் எனவும் பிரதிநிதி உறுதியளித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமை குறித்தும் இந்த சந்திப்பில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது..
நுண்கடன் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்துறையின் வட்டி விகிதங்கள் நியாயமாக இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்க சீர்திருத்தங்கள், ஊழலுக்கு எதிரான முயற்சிகள் மற்றும் பொருளாதாரம் மற்றும் பாராளுமன்றம் இரண்டிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உறுதிப்பாடு இந்த சந்திப்பின் போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா, மூலோபாய ஈடுபாடு, டிஜிற்றல் மற்றும் புத்தாக்கக் குழுவின் தலைவர் பாதில் பாக்கீர் மாக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.