சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கவனயீர்ப்புப் பேரணி.
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதியன்று வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திலிருந்து டிப்போ சந்தி வரை விசேட கவனயீர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், கடந்த காலமீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை. அதேவேளை நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், தமக்குரிய நீதியை நிலைநாட்டுமாறும் கோரி வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2000 மேலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அன்றைய தினம் கடந்த வருடங்களைப் போன்று விசேட கவனயீர்ப்புப் பேரணியை முன்னெடுப்பதற்கு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக திரளவுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் காலை 10.00 மணிக்கு டிப்போ சந்தியை நோக்கிப் பேரணியாகச் சென்று, அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபை கிளை அலுவலகத்தின் அதிகாரிகளிடம் தமக்கான நீதியைக் கோரி மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளனர்.
'வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் உறவுகளினதும், ஏனைய சகல தரப்பினரதும் ஆதரவுடன் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட எமது கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் 2749ஆவது தினத்தைப் பூர்த்திசெய்யவுள்ள நிலையில், அன்றைய தினம் எமது போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்' என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.