ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட செய்தி தொடர்பில் விசாரணை

1 month ago



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெளி அமைப்பு ஒன்றினால் காணொளி தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொலைக்காட்சியான செனல் 4 தொலைக்காட்சியினால், இலங்கையரான ஆசாத் மௌலானா என்ற மொஹமட் மிஹிலால் மொஹமட் ஹப்சீருடன் நேர்காணல் ஒன்றை நடத்தியது.

இந்த நேர்காணல் , 2023 செப்டம்பர் 6 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாள் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது.

இதன்படி, குறித்த காணொளியில் இடம்பெற்றுள்ள ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய விடயங்கள், குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சதி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விசாரணை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (11) கோட்டை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்தது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சிவனேஷ்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.