தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பெயர் பட்டியலில் தனது பெயர் உள்வாங்கப்படாததால் தனது முடிவை அறிவிப்பேன். சரவணபவன் தெரிவிப்பு
தமிழரசுக் கட்சியின் தேர்தல் நியமனக் குழுவினால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்படாத கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தனது அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இன்று அல்லது நாளைய தினம் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சியின் தேர்தல் நியமனக் குழுவினால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அதன்படி யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர்களாக எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இம்மானுவன் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராயா பிரகாஷ் ஆகியோர் வேட்பாளர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இருப்பினும் அப்பெயர் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, சசிகலா ரவிராஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை.
இதனையடுத்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கே.வி.தவராசா தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
அதேபோன்று தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் உள்வாங்கப்படாததன் காரணமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சங்கு சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் களமிறங்கப் போவதாக நேற்றைய தினம் அறிவித்த தமிழரசுக்கட்சி உறுப்பினர் சசிகலா ரவிராஜ், வேட்பு மனுவிலும் கையெழுத்திட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இம்முறை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனிடம் அவரது அடுத்தகட்ட நகர்வு என்னவென்று வினவியபோது, அதுகுறித்து இன்று (8) அல்லது நாளைய தினம் (9) தீர்மானமொன்றை அறிவிப்பதற்கு உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்தார்.
அதேவேளை தமிழரசுக் கட்சியின் தேர்தல் நியமனக்குழு கூடிய வேளையில், கடந்த தேர்தலின் போது நியமனக் குழுவினால் இறுதிப்படுத்தப்பட்ட 17 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் கட்சித்தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவினால் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கத்திடம் கையளிக்கப்பட்டதாகவும், அதனைப் பெற்றுக்கொண்ட சத்தியலிங்கம் சுமந்திரனுடன் வெளியே சென்றதாகவும் சுட்டிக்காட்டிய சரவணபவன், அவர்கள் மீண்டும் உள்ளே வந்தபோது சிலரது பெயர்கள் வெட்டப்பட்டு, 17 பெயர்கள் 11 ஆகக் குறைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
அத்தோடு அவ்வாறு பெயர் வெட்டப்பட்ட பெரும்பாலானோர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்தவர்களாவர் எனக் குறிப்பிட்ட அவர், பொதுத் தேர்தலில் களமிறங்கும் உறுப்பினர் கட்சியின் தேர்தல் நியமனக் குழுவில் அங்கம் வகிப்பது நியாயமான விடயமல்ல என்றும் விசனம் வெளியிட்டார்.